ஆப்கானில் பெண்கள் நடத்தி வந்த ஒரே ஒரு வானொலி நிலையத்திற்கும் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இச்சம்பவம், அந்நாட்டு பெண்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆப்கான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதை தொடர்ந்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சர்வதேச வல்லுனர்கள் கூறுவது என்னவெனில், ஆப்கான் மிகப்பெரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, உலகிலேயே உணவுத் தட்டுப்பாடு ஆப்கானிஸ்தானில்தான் அதிகமாக உள்ளது. அதிகப்படியான மக்கள் உணவுக்காகத் தவித்து வருகின்றனர்.
அதேபோல், தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டில் மனித உரிமை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான், அந்நாட்டில் பெண்கள் நடத்தி வந்த ஒரே வானொலியான ‘சடை பனோவன்’ (பெண்களின் குரல்) என்ற வானொலிக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இச்சம்பவம், அந்நாட்டு பெண்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.