சமீபத்தில் வெளியான புர்கா படத்தைத் தொடர்ந்து, தற்போது வெளியாகவிருக்கும் ஃபர்ஹானா திரைப்படத்துக்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தேசிய லீக் கட்சி ஆகியவை வலியுறுத்தி இருக்கின்றன.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகி நடித்திருக்கும் படம் ‘ஃபர்ஹானா’. இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ‘ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் தன்னுடைய குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், எதற்கும் ஏங்கிவிடக்கூடாது என்று நினைக்கும் ஒரு சராசரி தாயாகவும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண்ணாகவும் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதற்காக, தன்னுடைய மதக் கோட்பாடுகளை தாண்டி அவர் வேலைக்குச் செல்கிறார். இதனால் அவர் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியதுதான் இப்படம். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆகவே, கண்டிப்பாக இப்படத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புக் கிளம்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்க்கப்பட்டது போலவே, இந்திய தேசிய லீக் கட்சி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகியவை போலீஸில் புகார் அளித்திருக்கின்றன. அப்புகாரில், “சமீபத்தில் ஓ.டி.டி. மூலம் வெளியிடப்பட்ட ‘புர்கா’ திரைப்படம் இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடுமையாகத் தாக்கி எடுக்கப்பட்டிருந்தது. முஸ்லீம்கள் பெரிதும் மதிக்கக்கூடிய திருக்குர்ஆன் வசனங்களைத் திரையிட்டு, உண்மைக்கு மாறான கருத்துகளை இஸ்லாம் சொல்வதுபோல் அப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இத்திரைப்படத்தை தொடர்ந்து எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல், தற்போது ‘ஃபர்ஹானா’ என்கிற படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
ஃபர்ஹானா திரைப்படத்தின் டீசரில் ஒரு இஸ்லாமிய பெண் புர்கா அணிந்து உலகம் முழுவதும் சுற்றி வியாபாரம் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது இஸ்லாமிய பண்பாடு கலாசாரத்திற்கு எதிரானது. தவிர, இஸ்லாமியப் பெண்களை அவமதிக்கும் விதமாக வசனங்கள் வருகின்றன. மேலும், இந்த 2 படங்களிலும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் என்ற ஆடையும் கொச்சைப்படுத்தப்படுகிறது. ஆகவே, ஃபர்ஹானா திரைப்படத்தை திரைக்கு வராமல் தடை செய்வதோடு, ஓ.டி.டி. தளத்தில் சமீபத்தில் வெளியான ‘புர்கா’ திரைப்படத்தையும் இணையத்தில் இருந்து நீக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
சில இயக்குனர்கள் ஹிந்து கடவுள்களையும், ஹிந்து மத குருமார்களையும், ஹிந்து கலாசாரத்தையும் அவமதிக்கும் மதிக்கும் வகையில் படம் எடுத்து வருகிறார்கள். குறிப்பாக, பாலிவுட் மற்றும் கோலிவுட் இயக்குனர்களின் பெரும்பாலான படங்களில் ஹிந்து மத துவேசம் தூக்கலாக இருக்கும். இதுபோன்ற படங்கள் வெளியாகும்போது ஹிந்துக்கள் மட்டுமே கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள். அதேபோல, தற்போது சில இயக்குனர்கள் முஸ்லீம் மத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள் குறித்து திரைப்படம் எடுத்து வருகிறார்கள். இதற்கு முஸ்லீம்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஆகவே, எந்த மதமாக இருந்தாலும் சரி, மத நம்பிக்கைகளை அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் வகையில் இயக்குனர்கள் படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.