திருவோணம் பண்டிகை – கேரள மக்களுக்கு வாழ்த்து என்ற பெயரில் இந்து மத அவமதிப்பு செய்யும் தமிழக முதல்வர்

திருவோணம் பண்டிகை – கேரள மக்களுக்கு வாழ்த்து என்ற பெயரில் இந்து மத அவமதிப்பு செய்யும் தமிழக முதல்வர்

Share it if you like it

கேரள மண்ணை ஆண்ட மாபலி சக்கரவர்த்தியின் ஆணவப் போக்கை அடக்கும் விதமாக சிறுவனாக வந்த நாராயணன் மூன்றடி மண் யாசகம் பெறும் பொருட்டு வானையும் மண்ணையும் இரண்டடியில் அளந்து மூன்றாம் அடியில் மாபலியின் சிரசில் தடம் பதித்து அவனை பாதாளத்தில் அமிழ்த்தினார் . அவனது அகந்தையை அடக்கி அவனுக்கு மோட்சம் நல்கிய திருநாளே ஓணம் பண்டிகையாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் வாழ்த்துச் செய்தியில் கூட தமிழக முதல்வர் தனது இந்து மதத்திற்கு எதிரான வன்மத்தையும் துவேசத்தையும் வெளிப்படுத்துவது யுகங்கள் மாறினாலும் ஆட்சியாளர்களின் ஆணவப் போக்கு மாறாததையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

தங்களை முற்போக்கு வாதிகள் திராவிட வழி வந்த பகுத்தறிவு வாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் திமுக கட்சியின் தலைமை தொடர்ந்து இந்து மத எதிர்ப்பாளர்களாக வெறுப்பாளர்களாக தங்களை நிலை நிறுத்தி வருகிறார்கள். பொதுவாக எந்த ஒரு இந்து பண்டிகைக்கும் விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வழக்கம் அவர்களுக்கு கிடையாது. அவர்களின் குடும்பத் தொலைக்காட்சிகளில் கூட விடுமுறை தின சிறப்பு கொண்டாட்டம் என்று தான் சிறப்பு நிகழ்ச்சிகளில் அறிவிப்பு வருமே தவிர இந்து பண்டிகை கொண்டாட்டங்களின் பெயர் அறிவிப்பு வருவதில்லை. ஆனால் சமீப காலமாக சமூக ஊடகங்கள் ஊடகங்கள் வாயிலாக இதைப் பற்றிய பெரும் விவாதமும் விமர்சனமும் எழுந்த நிலையில் குடும்பத் தொலைக்காட்சிகளின் போக்கில் மாற்றம் தென்படுகிறது.

ஆனால் கடந்த காலங்களில் இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழாவை வாழ்த்தி முதலில் பதிவிட்டு பிறகு அந்த பதிவை நீக்கி அதற்கு ஒரு மலிவான கருத்தை முன்வைத்து முதல்வரின் மகன் தனது இந்து மத துவேஷத்தை வெளிப்படுத்தினார். ஒரு பொது மேடையில் வெளிப்படையாக தன்னை ஒரு கிறிஸ்தவர் என்றும் தான் இப்படி வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில் காவிகளுக்கு எரிச்சலாக இருக்கும் என்றும் வெளிப்படையான அரசியல் வன்மத்தை தொடர்ந்தார் .

எந்த ஒரு சிறுபான்மை பண்டிகைகளுக்கும் திருவிழாக்களுக்கும் முதல் நபராக வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக்கி அவர்களின் விசேஷ அழைப்பாளர்களாகவும் கலந்து கொள்ளும் வழக்கம் திமுக தலைமைக்கு எப்போதும் உண்டு. ஆனால் இந்து மத பண்டிகைகளுக்கும் விசேஷங்களுக்கும் அவர்கள் வாழ்த்து சொல்வதோ அதற்கு உரிய கௌரவம் கொடுப்பதோ அவர்களுக்கு வழக்கில் இல்லை . அது அவர்களின் கட்சி அரசியல் சார்ந்த வகையில் சரி என்றாலும் ஒரு முதல்வர் பொறுப்பில் இருக்கும் போது பாரபட்சம் இன்றி அனைத்து தரப்பு மக்களையும் பொதுவாக அரவணைத்து போவது தான் சரி. தமிழக முதல்வரின் இந்த பெரும்பான்மை மக்கள் விரோத மனநிலை அவர் வகிக்கும் பொறுப்பிற்கு அழகல்ல என்பதை பல்வேறு தரப்பினரும் எடுத்துரைத்தார்கள். அதன் பிறகும் திமுக கட்சியின் தலைமையும் அதன் மூத்த நிர்வாகிகளும் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை .அது எங்களுக்கு வழக்கமும் இல்லை என்று பொதுவெளியில் ஆணவப் போக்கிலேயே பதிலளித்து வந்தார்கள்.

இன்று திருவோணம் பண்டிகையை ஒட்டி கேரள மக்களுக்கு ஓணம் திருநாள் வாழ்த்து சொல்லிய தமிழக முதல்வர் அதில் அறுவடை திருநாள் என்ற பொருள்படும்படியான வாழ்த்து செய்தியை கேரள மக்களுக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். கேரள மாநிலத்தில் இது அறுவடை காலமும் இல்லை .அறுவடை செய்யும் அளவில் அங்கு விவசாயமோ அது சார்ந்த உணவு உற்பத்தியோ பெரிய அளவில் இல்லை. அவர்களின் பெரும்பாலான உணவு தேவைக்கு தமிழகத்தையே நம்பி இருக்கிறார்கள் என்பது தமிழகத்தை ஆளும் முதல்வர் அறியாதவரா? .

இது முதல்வருக்கு நன்றாக தெரிந்து அறுவடை திருநாள் என்ற பெயரில் அவர்களுக்கு வாழ்த்து செய்தி தருவாரானால் கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்து சொல்ல வேண்டும். அதே நேரத்தில் ஓணம் திருநாளில் தார்பர்யமான மாபலி சக்கரவர்த்தியும் வாமன அவதாரமும் இந்து மதத்தின் பாரம்பரிய அடையாளங்கள். ஆன்மீக நிகழ்வுகள் அதை முன் வைத்து நாம் வாழ்த்து சொல்ல கூடாது .அது நம் சித்தாந்தத்திற்கு எதிரானது .இதுவரை நாம் கடைப்பிடித்து வரும் இந்து மத எதிர்ப்பு துவேஷத்திற்கு விரோதமானது .நாம் போகும் இடமெல்லாம் உயர்த்தி பிடிக்கும் சிறுபான்மை மக்களை உங்களால் தான் இந்த ஆட்சி உங்களுக்காக தான் இந்த ஆட்சி என்று பேசும் சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல் பாசத்திற்கும் விரோதமானது என்று கருதி அவர் இந்த இந்து மத அடையாளங்களை வாழ்த்துச் செய்தியில் தவிர்த்து இருக்கலாம். அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

ஆனால் ஒரு பக்கம் தமிழகத்தில் தங்களுக்கு வாக்களித்து அரியணையில் அமர்த்திய இந்து மக்களுக்கு பண்டிகை நாளை வாழ்த்து சொல்ல மனமில்லாதவர் கேரள மக்களுக்கு முதல் நபராக வாழ்த்து சொல்லி தமிழக மக்களை அலட்சியப்படுத்துகிறார். மறுபக்கம் கேரள மக்களுக்கு கொடுக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துச் செய்தியிலும் அந்த திருநாளில் ஆன்மீக தார்ப்பர்யம் – பாரம்பரிய கலாச்சார அடையாளம் எதையுமே குறிப்பிடாமல் சம்பந்தமே இல்லாத அறுவடை திருநாள் என்ற வார்த்தை கூறி அந்த கேரள மக்களையும் அவர்களின் பண்பாடு கலாச்சாரத்தையும் அவமதிக்கிறார் . அந்த வகையில் இந்து பண்டிகைகளுக்கு திருவிழாக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்காமல் புறக்கணிப்பது ஒரு வகை . ஏதேனும் ஒரு கட்டத்தில் வாழ்த்துச் செய்திகள் தெரிவித்தாலும் அதன் உண்மையான இந்து ஆன்மீக பாரம்பரியத்தை தவிர்த்து சம்பந்தமில்லாத சொற்றொடர் மூலம் வாழ்த்து தெரிவித்து அதன் மூலம் இந்து மதத்தை அவமதிப்பது ஒரு வகை என்று ஏதோ ஒரு வகையில் தங்களின் இந்து மத துவேசத்தை வெளிப்படுத்துவது தான் தங்களது வழமை. அதுதான் தங்களது திராவிட மாடல் ஆட்சியின் பெருமை என்பதை தமிழக முதல்வர் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.


Share it if you like it