தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திட்டம்: காம்ரேடுகள் கப்சிப்!

தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திட்டம்: காம்ரேடுகள் கப்சிப்!

Share it if you like it

பா.ஜ.க. அரசு ஏதாவது ஒரு திட்டத்தை அறிவித்தால் உடனே காச்மூச் என சவுண்டு விடும் காம்ரேடுகள், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும் என்று கேரள கம்யூனிஸ்ட் அரசு அறிவித்திருப்பதற்கு கப்சிப் என்று இருப்பது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையின் உரிமை முழுவதும் தமிழக அரசிடம் மட்டுமே இன்று வரை இருந்து வருகிறது. அதேபோல, அணை இருக்கும் பகுதி அனைத்தும் தமிழக அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது. அணையில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டுமென்றால் தமிழக அரசின் அனுமதியை பெற வேண்டும். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு, தமிழகத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், அணையில் இருந்த நீரை கேரளாவைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் திறந்து விட்டனர். இச்சம்பவம் தேனி விவசாயிகள் மத்தியில் கடந்தாண்டு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இதன் மூலம், கேரள அரசிடம் நமது உரிமைகளை முற்றிலும் இழந்ததோடு, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று கூறி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் தேனியில் நடைபெற்றது. இந்த நிலையில்தான், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும் என்று கேரள மாநில சட்டசபைக் கூட்டத்தொடரில் கவர்னர் ஆரிப் முகமது கான் உரை நிகழ்த்தியுள்ளார். மேலும், முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்த்தப்படாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இப்படி தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் முடிவை எடுத்திருக்கும் கேரள அரசுக்கு இன்று வரை காம்ரேடுகள் யாரும் எதிர்வினை ஆற்றவில்லை. குறிப்பாக, பா.ஜ.க. அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும், அடுத்த நிமிடமே கருத்து கந்தசாமியாக ட்விட்டரில் பதிவிடும் அருணன், சுந்தரவள்ளி, மதுரை எம்.பி. வெங்கடேசன் போன்றவர்கள் இந்த விஷயத்தில் மட்டும் வாய்மூடி கப்சிப் என்று இருக்கிறார்கள். இதற்குத்தான், நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it