கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 4.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பலனடையும் ஆனைமலை நல்லாறு திட்டம், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கான நிதி உதவியை, மாநில அரசும் வழங்காமல், கிடப்பில் போட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
பல்லடம் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தமிழக பாஜக பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
எந்திரவியல் துறை, விவசாயம், நெசவு உள்ளிட்ட தொழில்கள் சிறந்து விளங்கும் கோவை பாராளுமன்றத் தொகுதிக்கான நலத்திட்டங்களைப் பெற்றுத் தர, பாராளுமன்ற உறுப்பினருக்கு, அவை குறித்த முறையான தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 4.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பலனடையும் ஆனைமலை நல்லாறு திட்டம், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கான நிதி உதவியை, மாநில அரசும் வழங்கவில்லை. மத்திய அரசிடமும் வலியுறுத்திப் பெறவில்லை.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் தேவைப்படும் சுமார் 10,000 கோடி ரூபாய் நிதி உதவியை, இத்தனை ஆண்டுகளாகப் பெற்றுத் தராமல், ஆனைமலை நல்லாறு திட்டத்தைக் கிடப்பில் போட்டு வைத்திருந்தது தமிழக அரசுகள். மத்திய அரசிடம் இருந்து இதற்கான நிதியை உரிமையாக வலியுறுத்திப் பெற முடியுமென்றால், அது நமது பாஜக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் மட்டும்தான் முடியும். இதுபோன்று, தமிழக அரசு கிடப்பில் போட்டிருக்கும், தொகுதிக்கான நலத்திட்டங்கள் அனைத்தையும் மத்திய அரசின் உதவியோடு நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்வேன் என்று உறுதி அளித்தேன்.
மேலும், வரும் பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து ஆற்ற வேண்டிய பணிகளைக் குறித்தும் உரையாடினோம்.