தமிழக அரசானது ஒவ்வொரு குடும்பத்தின் மீது 3.79 லட்ச ரூபாய் கடன் வைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 2.69 லட்ச கோடி ரூபாய் கடனை கூட்டியுள்ளது. இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலங்களில் நம்பர் ஒன்னாக தமிழகத்தை மாற்றி வைத்திருக்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசின் மீது குற்றசாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது :-
கடந்த ஒன்பது ஆண்டுகளில், மாண்புமிகு பாரதப் பிரதமர் தலைமையிலான மத்திய அரசு, உலக அரங்கில் நமது நாட்டை உயர்த்தியிருக்கிறது. பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறோம். ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாமல் நேர்மையான ஆட்சி நடந்து வருகிறது. அனைத்துப் பயனாளிகளுக்கும் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் இருந்து சென்ற திமுக பாராளுமன்ற உறுப்பினர்களால் எந்தப் பயனும் இல்லை. தொகுதி பக்கமோ, பாராளுமன்றப் பக்கமோ செல்வதும் இல்லை, தொகுதிப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதும் இல்லை. மக்களுக்குக் கொடுக்கும் பணத்தை, மக்களை அலைக்கழித்து திமுக கட்சிக்காரர்கள் வழியாகக் கொடுக்கிறார்கள்.
2019 ஆம் ஆண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், 351 மாசடைந்த நதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதலிடம் ஆத்தூர் தொகுதியில் உள்ள வசிஷ்ட நதி. தமிழகத்தில் உள்ள கூவம், அடையாறு, நொய்யல், தாமிரபரணி என்று ஒவ்வொரு நதியும் இன்று மாசுபட்ட நதிகளாக உள்ளன. இதனைச் சரி செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்தூர் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், பாலம் இல்லாததால் வசிஷ்ட நதியில் தண்ணீரில் இறங்கி ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகள், ஆற்றை கடக்க சிரமப்படுவதோடு, சில நேரங்களில் தண்ணீரில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர். இங்கு ஒரு பாலம் அமைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
கூலமேடு ஜல்லிக்கட்டு, தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. ஜல்லிக்கட்டு, காட்டுமிராண்டி விளையாட்டு என கேலி செய்து, காங்கிரஸ் திமுக கூட்டணி அரசால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு இன்று மீண்டும் தமிழகத்தில் நடைபெறக் காரணம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். திமுக தனது 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் கடந்தும், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இந்த ஆண்டு மார்ச் மாதம் முடியும் போது தமிழகத்தின் மொத்த கடன் 8,34,544 கோடி ரூபாய். தமிழகத்தில் சுமார் 2.2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். அதாவது 2.2 கோடி குடும்பங்கள். ஒவ்வொரு குடும்பத்தின் மீது 3.79 லட்ச ரூபாய் கடன் வைத்துள்ளது தமிழக அரசு. கடந்த 3 ஆண்டுகளில் 2.69 லட்ச கோடி ரூபாய் கடனை கூட்டியுள்ளது. இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலங்களில் நம்பர் ஒன்னாக தமிழகத்தை மாற்றி வைத்திருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் கவுதம் சிகாமணி, தொகுதிக்கு வருவதே இல்லை. இவரது தந்தை அமைச்சர் பொன்முடி சிறை சென்றதைப் போல, செம்மண் கடத்திய ஊழலுக்கு இவரும் சிறைக்கு செல்வார். ஒரு குடும்பத்துக்காகவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழக மக்களுக்காக உழைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகமும் துணை நிற்க வேண்டும்.