தமிழகத்தில் மாநில சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு சுற்றுலா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கும் கூட இந்த சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். இது தொடர் விடுமுறை நாட்கள் பண்டிகை கால விடுமுறைகளில் திட்டமிட்டு நடத்தப்படுவது நடைமுறையில் இருக்கிறது. அந்த வகையில் அடுத்து வரும் புரட்டாசி மாதம் விஷ்ணு வழிபாட்டிற்கு உகந்ததாக விஷ்ணு ஆலயங்களில் மக்கள் அதிகம் கூடும் வழக்கம் உண்டு . அதை பயன்படுத்தி தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்திருக்கிறது. அதை ஆன்மீக சுற்றுலா என்று குறிப்பிடாமல் வெறும் சுற்றுலாவாக மட்டும் அடையாளப்படுத்தி இருப்பது தமிழகத்தில் ஆன்மீகவாதிகள் மத்தியில் பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மாற்று மதங்கள் வழிபாட்டுத்தலங்கள் என்று வரும்போது அதற்குரிய நம்பிக்கை கட்டுப்பாடுகள் மரபுகளை தவறாமல் பின்பற்றும் தமிழக அரசு சனாதன தர்மம் என்று வரும்போது மட்டும் பாரபட்சம் காட்டுகிறது .ஆனால் அதே மாநில அரசு இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் திட்டமிட்டு ஆலயங்களை இறுக்கி ஆன்மீகவாதிகளை தொடர்ந்து துன்புறுத்துவதும் தமிழகத்தின் மாநில ஆட்சியாளர்கள் மீது பெரும் அதிருப்தியையும் எதிர்ப்பு மனநிலையையும் உருவாக்கி இருக்கிறது.
இந்நிலையில் எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றும் விதமாக புரட்டாசி மாதத்தை ஒட்டி சென்னை மதுரை திருச்சி தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் பாடல் பெற்ற திவ்ய தேச பெருமாள் கோவில்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவை தமிழக சுற்றுலா துறை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த ஏற்பாட்டை இந்து அறநிலையத்துறையின் ஆன்மீக சுற்றுலா அல்லது தமிழக சுற்றுலாத் துறையின் சார்பான புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா என்று குறிப்பிடாமல் வெறுமனே சுற்றுலா என்று குறிப்பிட்டு இந்து ஆன்மீக தலங்களை சுற்றுலாத்தலமாக கட்டமைக்க முயலும் ஆட்சியாளர்களின் நயவஞ்சகத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில் பழனி மலைக்கோவிலில் இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்ற பதாகை அகற்றப்பட்டு அதன் காரணமாக மாற்று மத நபர்கள் உள்ளே நுழைய முயன்ற சர்ச்சை நேரிட்டதில் சுற்றுலா தலங்கள் என்றால் எல்லோரும் பொதுவான இடம் எல்லாரும் பொதுவாக வரத்தான் செய்வார்கள் என்ற இந்து அறநிலையத்துறை அமைச்சரின் கருத்து பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியது .அதாவது இந்து ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை அனைவருக்கும் பொதுவான சுற்றுலா தலங்கள் என்ற ரீதியில் இந்து அறநிலையத்துறையின் அமைச்சரே பேசியது இன்றைய ஆட்சியாளர்களின் அப்பட்டமான சனாதன விரோதப் போக்கை வெளிப்படுத்தியது. அதை இந்த சுற்றுலா ஏற்பாடு மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறது.
அந்த சுவடு மாறாத நிலையில் இந்து அறநிலையத்துறையும் தமிழகத்தின் விளையாட்டு இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சரும் தமிழகத்தின் முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றம் சனாதனத்தை ஒழித்தே தீருவது என்று வன்மத்தோடு பேசி வந்ததும் பெரும் சர்ச்சையாகி கண்டனம் வழக்கு என்று வளர்ந்து நிற்கிறது .ஆனால் இதற்கெல்லாம் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியை இழந்தாலும் கவலை இல்லை திமுக ஆட்சி உருவாக்கப்பட்டதே இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் என்று வெளிப்படையாக பேசி வருகிறார்.
இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் அவருக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பதும் ஆலயங்களில் நிர்வாகம் முதல் ஆகமம் வரை அனைத்திலும் அத்துமீறும் செயல்களுக்கு முழு ஆதரவு வழங்குவதுமாக தனது சனாதன விரோதத்தை அப்பட்டமாக அரங்கேற்றி வருகிறார். அதன் ஒரு சாட்சியமாக புரட்டாசி மாதத்தில் நடக்கும் ஆன்மீக சுற்றுலாவை சுற்றுலா என்று அடையாளப்படுத்தி அதன் மூலம் இந்து ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை அனைவருக்கும் பொதுவான சுற்றுலா தளங்களாக பொழுதுபோக்கு இடங்களாக கட்டமைக்க முயலும் அவர்களின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார்.
ஆலயங்கள் வேண்டும். அவற்றின் பொக்கிஷங்கள் சொத்துக்கள் உண்டியல் வருவாய் கள் எல்லாம் வேண்டும். ஆனால் அதன் ஆகமங்கள் அதன் வழியிலான வழிகாட்டும் நியதிகள் கட்டுப்பாடுகள் வேண்டாம். அந்த ஆலயத்திற்கு வந்து போகும் ஆன்மீக அடியார்களின் மன திருப்தி பற்றிய கவலை இல்லை. அவர்களுக்கு வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் என்று எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனால் ஆலயத்தின் வருவாய் மட்டும் மொத்தமாக அரசின் கஜானாவிற்கு வந்து சேர வேண்டும் என்று இந்து அறநிலையை துறையை கட்டமைத்து அதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆலயங்களை அழிப்பதற்கு அத்தனை பிரயத்தனங்களையும் செய்து வருகிறார்கள்.
எந்த ஒரு துறையின் சார்பாக ஒரு சர்ச்சை எழுந்தாலும் அல்லது அதற்கு எதிரான குற்றச்சாட்டுகள் விமர்சனங்கள் வந்தாலோ அந்த துறையின் சார்ந்த அமைச்சர் அதற்கு உரிய விளக்கத்தை வழங்குவார் . அந்த துறையின் மாண்பை காப்பாற்ற உரிய நடவடிக்கைகளையும் எடுப்பார் . ஆனால் தமிழகத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் மட்டும் இந்து சனாதனத்தை துவேசிப்பதும் அதை துவேஷிப்பவர்களுக்கு கருத்து சுதந்திரம் ஜனநாயகம் என்ற பெயரில் பாதுகாப்பு வழங்குவதையும் மட்டுமே முழு நேர தொழிலாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்து அறநிலையத்துறை என்ற ஒன்று தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டதே இந்து சனாதன தர்மத்தையும் அதன் வழியில் வாழும் மக்களையும் முற்றாக அழித்து ஆலயங்களையும் அதன் பொக்கிஷங்களையும் அபகரிக்கும் எண்ணத்தில் தான் என்பதை ஒவ்வொரு நிகழ்விலும் இந்து அறநிலையத்துறையும் அதன் அமைச்சரும் இன்று வரை நிரூபித்து வருகிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய பொதுமக்களில் பலரும் கட்சிக்காரர்கள் என்ற அடையாளத்தோடு கோவிலின் சொத்துக்களின் குத்தகைதாரர்களாக ஆலய கட்டுமானங்களில் வாடகைதாரர்களாக தங்களின் சுயலாபம் கருதி இவை அனைத்தையும் ஆதரிக்கிறார்கள். உண்மையில் பாவப்பட்ட கடைநிலையில் இருக்கும் மக்களுக்கு இருக்கும் பக்தியும் ஈடுபாடும் கூட உயர்ந்த பொறுப்புகளிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களுக்கு இல்லாமல் போனது இந்த மண்ணின் சாபக்கேடு தான்.
வெறும் கடவுள் நம்பிக்கை மட்டும் போதாது. உள்ளன்போடு இறைவனை வணங்கும் பக்தி மட்டுமே மக்கள் மனதில் ஆன்மீக பற்றுதலை வளர்க்கும். அந்த ஆன்மீக பற்றுதலும் சித்தாந்த நெறிகளோடு வாழும் மனப்பக்குவமும் தான் மக்களுக்கு எப்படி நமக்கு ஒரு நன்மை தீமை எது விளைந்தாலும் ஆலயத்தில் தரிசனம் செய்து இறைவனிடத்தில் அதை முழுமையாக அர்ப்பணித்து வேண்டுதல் வைக்கிறோமோ அதே போல அந்த ஆலயங்களுக்கும் அதன் ஆகமங்களுக்கும் அது சார்ந்த ஆன்மீக வாதிகளுக்கும் ஏதேனும் கொடுமைகள் நடக்கும் போதும் நாம்தான் முதல் ஆளாக நின்று அதை தட்டிக் கேட்க வேண்டும். உரிய நியாயம் கிடைக்க வழிவகை தேட வேண்டும் என்ற பொறுப்புணர்வு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வர வேண்டும் .
நம்முடைய ஆலயங்கள் நம்முடைய ஆன்மீகம் கலாச்சாரம் சார்ந்த பொக்கிஷங்கள். அவற்றை பாதுகாக்க வேண்டும் எனில் அதன் மாண்பை உணர்ந்து சனாதன தர்மத்தின் உன்னதத்தை உயர்த்தி பிடிக்கும் ஆட்சியாளர்களால் மட்டுமே முடியும். அந்த வகையில் நம் தர்மத்தை மதிக்கும் அரசியல்வாதிகளை மட்டுமே நாம் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு போக வேண்டும் என்ற உறுதியும் கட்டுப்பாடும் இங்குள்ள மக்களுக்கு வர வேண்டும் . அந்த நிலைப்பாடு வராத வரையில் இங்குள்ள ஆலயங்கள் சீரழியவே செய்யும். இந்து அறநிலையத்துறையின் அராஜகம் தொடரவே செய்யும்.ஆலயங்கள் ஆகமங்களின் பிரச்சினையை இந்து அமைப்புகள் கட்சிகள் சார்ந்த பிரச்சனையாக கடந்து போகாமல் நமது தர்மத்தின் பிரச்சனையாக நம் ஆலயத்தின் மீதான நம் தனிமனித வாழ்வியல் மீதான அச்சுறுத்தல் என்பதை உணர்ந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இங்கு இந்து அறநிலையத்துறை அராஜகம் முடிவுக்கு வரும்.