நம்ப வைத்து ஏமாற்றியவர்கள்!!
தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022 ஆம் ஆண்டு அன்று, பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடந்தது. 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலின் முடிவுகள், பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி அன்று, வெளியானது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அமோக வெற்றி பெற்றது. புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட உறுப்பினர்கள் அனைவரும், மார்ச் மாதம் 2 ஆம் தேதி, பதவியேற்றுக் கொண்டனர்.
மாநகராட்சி மேயர், மாநகராட்சி துணை மேயர், நகராட்சித் தலைவர், நகராட்சித் துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், பேரூராட்சித் துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுகத் தேர்தல், மார்ச் மாதம் 4 ஆம் தேதி, நடைபெற்றது.
கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு திமுக ஒதுக்கீடு செய்த இடங்கள் :
காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் போட்டியிட்டது. அதற்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியும், சேலம், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் பதவியும், நகராட்சித் தலைவர் பதவியில் 6 இடங்களும், நகராட்சித் துணைத் தலைவர் பதவியில் 9 இடங்களும், பேரூராட்சித் தலைவர் பதவியில் 8 இடங்களும், பேரூராட்சித் துணைத் தலைவர் பதவியில் 11 இடங்களும், ஒதுக்கீடு செய்யப் பட்டன.
கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு, திமுக ஒதுக்கீடு செய்த இடங்கள் :
மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவி, நகராட்சித் தலைவர் பதவி இடங்கள் இரண்டு, நகராட்சித் துணைத் தலைவர் பதவி இடங்கள் – 3, பேரூராட்சித் தலைவர் பதவி இடங்கள் – 3, பேரூராட்சித் துணைத் தலைவர் பதவி இடங்கள் – 6, ஒதுக்கீடு செய்யப் பட்டன.
கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு, திமுக ஒதுக்கீடு செய்த இடங்கள் :
திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி, நகராட்சித் தலைவர் பதவி இடங்கள் ஓன்று, நகராட்சித் துணைத் தலைவர் பதவி இடங்கள் – 4, பேரூராட்சித் தலைவர் பதவி இடங்கள் – 4, பேரூராட்சித் துணைத் தலைவர் பதவி இடங்கள் – 6, ஒதுக்கீடு செய்யப் பட்டன.
கூட்டணிக் கட்சியான மதிமுகவுக்கு, திமுக ஒதுக்கீடு செய்த இடங்கள் :
ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி, நகராட்சித் தலைவர் பதவி இடங்கள் ஓன்று, நகராட்சித் துணைத் தலைவர் பதவி இடங்கள் – 3, பேரூராட்சித் தலைவர் பதவி இடங்கள் – 3, பேரூராட்சித் துணைத் தலைவர் பதவி இடங்கள் – 3, ஒதுக்கீடு செய்யப் பட்டன.
கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகளுக்கு, திமுக ஒதுக்கீடு செய்த இடங்கள் :
கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவி, நகராட்சித் தலைவர் பதவி இடங்கள் இரண்டு, நகராட்சித் துணைத் தலைவர் பதவி இடங்கள் – 3, பேரூராட்சித் தலைவர் பதவி இடங்கள் – 3, பேரூராட்சித் துணைத் தலைவர் பதவி இடங்கள் – 7, ஒதுக்கீடு செய்யப் பட்டன.
மாநகராட்சி மேயர் – துணை மேயர், நகராட்சித் தலைவர் – துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர் – துணைத் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும். அவற்றின் மூலமே, வேட்பாளர்கள் தேர்ந்து எடுக்கப் படுவார்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப் பட்ட இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் எல்லாம், திமுக வேட்பாளர்களே போட்டியிடுவார்கள் என, அந்தக் கட்சியின் மேலிடம் அறிவித்தது.
மறைமுகத் தேர்தல் நடைபெறும் முறை :
புதிதாக தேர்ந்து எடுக்கப் பட்ட உறுப்பினர்களைக் கொண்டக் கூட்டத் தொடர், அரங்கில் கூட்டப் படும். அதில், கூட்டம் தொடங்கியவுடன், முதல் பதினைந்து நிமிடங்களில், போட்டியிட விரும்புபவர்கள் மனுத் தாக்கல் செய்வார்கள். அவர்களை இரண்டு உறுப்பினர்கள் வழி மொழிய வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட நேர்ந்தால், தேர்தல் நடத்தப் படும். ஒருவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை எனில், அவரே தேர்ந்து எடுக்கப் படுவார்.
அவற்றைப் போலவே, துணைப் பதவிகளுக்கான தேர்தலும், அதே நடைமுறையில் நடைபெறும்.
கூட்டணிக் கட்சிகளுக்கு உறுதி செய்ததை தட்டிப் பறித்த திமுகவினர் :
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, ஒதுக்கீடு செய்யப் பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வார்டு உறுப்பினர் கிரிஜா திருமாறன் என்பவர் நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என, அந்தக் கட்சியும் அறிவித்தது.
அவரை எதிர்த்து, திமுக சார்பில் போட்டியிட்ட வார்டு உறுப்பினர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அதிக வாக்குகளைப் பெற்று, நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவராக, தேர்ந்து எடுக்கப் பட்டார்.
ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சித் தலைவர் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு என, திமுக ஒதுக்கீடு செய்தது. அதனை நம்பி, காங்கிரஸ் கட்சியின் சார்பில், வார்டு உறுப்பினர் செல்வமேரி அருள்ராஜ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என, காங்கிரஸ் கட்சியும் அறிவித்தது.
ஆனால், திமுக வார்டு உறுப்பினர் சாந்தி சதீஷ்குமார், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தேர்ந்து எடுக்கப் பட்டார்.
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவி, காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டது. ஆனால் அங்கு, திமுக வேட்பாளர் சம்சாத் பேகம் போட்டியிட்டு, வெற்றியும் பெற்று உள்ளார்.
இதே போல, திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்ட பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி, தேனி அல்லி நகரம் நகராட்சி பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப் பட்டது. ஆனால் அந்தப் பதவிகளை, திமுக கைப்பற்றியது.
குமரி மாவட்டத்தில், கொல்லங்கோடு நகராட்சித் தேர்தலில், தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப் பட்டது. ஆனால் அங்கு திமுக வார்டு உறுப்பினர் ராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை தோற்கடித்து, வெற்றி பெற்றார்.
இதே போல, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி நகராட்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப் பட்ட துணைத் தலைவர் பதவியை, திமுக கைப்பற்றியது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சித் துணைத் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப் பட்டது. ஆனால் அங்கு, திமுக வேட்பாளர் குணசேகரன் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப் பட்ட தலைவர் பதவியை, திமுக கைப்பற்றியது.
மேலும் சில இடங்களில், திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து நின்ற, மற்றொரு திமுக வேட்பாளர், வெற்றி பெற்ற நிகழ்வுகளும், அரங்கேறி உள்ளன.
அரசியல் அழுத்தத்தால் மாற்றப் பட்ட தேர்வு முடிவு :
மதுரை மாவட்டத்தில் உள்ள டி கல்லுப்பட்டி பேரூராட்சியில், 10 வது வார்டில், திமுக சார்பாகப் போட்டியிட்டார், சுப்புலட்சுமி. அதே தொகுதியில், சுயேச்சையாகப் போட்டியிட்டார், பழனிச்செல்வி. இருவரும் தலா 284 வாக்குகளைப் பெற்றனர். குலுக்கல் முறையில், சுயேச்சை வேட்பாளர் பழனிச்செல்வி, வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.
ஆனால் திடீரென, திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக, தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுயேச்சை வேட்பாளர் பழனிச்செல்வி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
திமுக வேட்பாளர் தரப்பில் வழங்கப்பட்ட, அரசியல் ரீதியிலான அழுத்தம் காரணமாகவே, தேர்தல் முடிவை மாற்றி, திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது என, தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கப் பட்டது, பொது மக்கள் அனைவரையும், மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
சென்னை மேயர் :
பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண், சென்னை மேயராக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது திமுகவால் தேர்ந்து எடுக்கப்பட்ட சென்னை மேயர், கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்?! என பிரபல ஆங்கில நாளிதழான “டெக்கான் க்ரானிக்கல்” (Deccan Chronicle) நாள் இதழில், மார்ச் மாதம் 9 ஆம் தேதி வந்த செய்தி, பொது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒருவர், மதம் மாறினால், அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக கருதப்பட வேண்டும் என்பதே, நமது நாட்டு சட்டம்.
தேர்தலில் யாவரும் போட்டியிடலாம், ஆனால் வெற்றி என்பது, ஒருவர் மட்டுமே பெற இயலும். தேர்தலில் வெற்றி பெற்று, மக்கள் பணியை செய்வது என்பது, எல்லோருக்கும் கிடைக்காத ஓர் அரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை மக்களாக தர வேண்டுமே தவிர, அரசியல் அழுத்தங்கள் மூலம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதே, சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகின்றது.
கூட்டணிக் கட்சியையே எதிர்த்து நின்று, போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அதிர்ச்சி அடைந்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். திமுகவிற்கு தங்களது குமுறல்களை தெரிவித்ததால், திமுக தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
எனினும், இன்னும் நிறைய பேர், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப் பட்ட இடங்களில் நின்று, எதிர்த்து போட்டியிட்டு, வெற்றியும் பெற்று, அந்தப் பதவியை ராஜினாமா செய்யாமல், அனுபவித்து வருகின்றனர் என்பதே, பத்திரிக்கையில் வரும் செய்தியாக இருக்கின்றது.
- அ. ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai