ஹிந்தி மொழியை பரப்ப நாடு முழுவதும் ஹிந்தி பிரசார சபா இருப்பதுபோல, தமிழ் மொழியை நாடு முழுவதிலும் பரப்ப தமிழ் பிரசார சபாவை தொடங்க மத்திய அரசு அதிரடி திட்டம் வகுத்து வருகிறது.
சுதந்திரப் போராட்டத்தின்போது, தென்னிந்திய மாநிலங்களில் ஹிந்தி மொழியை பரப்புவதற்காக 1918-ம் ஆண்டு சென்னை தி.நகரில் ஹிந்தி பிரசார சபாவை மகாத்மா காந்தி நிறுவினார். பின்னர், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா என 6,000 கிளைகள் வரை விரிவடைந்தது. இது மத்திய அரசின் நிதியுதவியுடன் தன்னாட்சி அதிகாரம் பெற்ற, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு பல்வேறு நிலைகளில் ஹிந்தி மொழிக் கல்வி நேரிலும், தபாலிலும் கற்பிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, ஹிந்தி பிரசார சபாவைப் போல தமிழ் பிரசார சபாவை நாடு முழுவதும் தொடங்க பாரத பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதாவது, கடந்த 2014-ல் பிரதமராக பதவியேற்றது முதல் தற்போதுவரை தமிழின் பெருமைகளை நரேந்திர மோடி பேசி வருகிறார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடந்த ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியில் பேசி பிரதமர் மோடி, “தமிழ்தான் உலகின் பழமையான மொழி” என்று கூறினார். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தமிழின் பெருமையை பரப்ப முடிவு செய்த பிரதமர், தமிழ் பிரசார சபா என்கிற கான்செப்ட்டை கையில் எடுத்திருக்கிறார்.
அந்த வகையில், தமிழ்மொழியை நாடு முழுவதும் பரப்ப ‘தமிழ் பிரச்சார சபா’ தொடங்கப்படவிருக்கிறது. இதன் கிளைகளை வட மாநிலங்கள் அனைத்திலும் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இங்கு சான்றிதழ், பட்டயப்படிப்பு என பல நிலைகளில் தமிழ்க் கல்வி போதிக்கப்படும். இதன் முதல்கட்டமாக தமிழ் பிரசார சபாவுக்கான பாடத்திட்டங்கள், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரதிய பாஷா சமிதி (தேசிய மொழிகளுக்கான அமைப்பு) நிர்வாகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ் பிரசார சபா தொடர்பாக நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று கூறப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் பிரசார சபா மூலம் தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கு நாடு முழுவதிலும் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட இருக்கிறதாம். இதில் ஹைலைட் என்னவென்றால், ஹிந்தி பிரசார சபாவை போலவே தமிழ் பிரசார சபாவை அமைத்து, மத்திய அரசின் நிதியையும் வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், ஹிந்தி பிரசார சபாவைப் போலவே தமிழ் பிரசார சபாவையும் தன்னாட்சி அதிகாரத்துடன் தமிழ் அறிஞர்கள் குழு நிர்வகிக்கும் என்று தெரியவருகிறது. ஆகவே, பிரதமரின் தமிழ் பிரசார சபா கான்செப்ட் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.