மங்களம் தரும் தமிழ் புத்தாண்டு

மங்களம் தரும் தமிழ் புத்தாண்டு

Share it if you like it

மங்களம் தரும் தமிழ் புத்தாண்டு

தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக உலகமெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் மனதில் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புது வருடம் வரவேற்கப்படுகிறது. அதன்படி இந்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு, தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை பிறப்பு, சித்திரை விஷூ, சித்திரைக் கனி, சங்கராந்தி என பல பெயர்களால் தென்னிந்தியாவில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அதேநேரம் மேற்கு வங்காளத்தில் பொய்லா போயிஷாக் என்ற பெயரில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கேரளாவில் விஷு என்றும் பஞ்சாபில் பைசாகி என்றும் அசாமில் பிஹூ என்ற பெயரிலும் இந்த நாளில் புத்தாண்டு கொண்டாடுகிறது.

சித்திரை முதல் நாளில் சூரிய பகவான் தனது பயணத்தை மேஷ ராசியில் இருந்து மீண்டும் துவங்கும் காலமாகும். இந்த வருடம் தமிழ் புத்தாண்டு தினத்தன்று சுபகிருது ஆண்டு நிறைவடைந்து சோபகிருது ஆண்டு பிறக்க உள்ளது.

மேலும் 2023ம் ஆண்டு தமிழ் புத்தாண்டானது மங்களகரமான வெள்ளிக்கிழமையில் வருகிறது. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாட்டிற்கு உரிய நாளாகும். இந்த ஆண்டு சித்திரை முதல் நாளில் திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. பெருமாளுக்குரிய முக்கிய விரத நாளான இந்த நாளில் பெருமாளையும், மகாலட்சுமியையும் வழிபட வீட்டில் செல்வ வளம் பெருகும்.

இந்த புது வருடத்தில் செய்யப்பெறும் அனைத்துச் செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் நாம் அனைவரும் புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று வழிபடுவதோடு பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறவேண்டும்.

தமிழ் புத்தாண்டை கொண்டாட முதல் நாளே மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து பூஜை அறைகளை அலங்கரிப்பார்கள். சித்திரை முதல்நாளில் வீட்டில் செல்வ வளம் பெருக சித்திரை கனி பார்க்கும் வழக்கம் பல காலமாக உள்ளது.

சித்திரை கனி பார்க்கும் வழக்கம் உள்ளவர்கள் தங்கள் பூஜை அறையில் முதல் நாள் இரவே ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் உட்பட பல பழவகைகளுடன் வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வைப்பார்கள். மேலும் அதனுடன் சில தங்க நகைகளையும் ரூபாய் நோட்டுகளையும் வைப்பார்கள். இந்த தட்டுக்கு முன்பாக முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றும் வைக்கப்படும்.

மறுநாள் புத்தாண்டு தினத்தன்று காலையில் எழுந்து, கண் விழிக்கும் முன் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தட்டில் வைத்துள்ள பழங்கள், பணம், நகை ஆகியவற்றை தான் முதலில் பார்க்க வேண்டும். பிறகு கண்ணாடியில் அவரவர்களின் முகத்தை பார்த்து விட்டு, மகாலட்சுமியை நினைத்து, தட்டை தொட்டு வணங்கி விட்டு, அன்றாட வேலைகளை துவங்குவார்கள்.

புத்தாண்டு தினத்தன்று மக்கள் தங்கள் வீடுகளில் சர்க்கரை பொங்கல், வடை, பாயாசத்துடன் சைவ வகை உணவுகளை சமைத்து இறைவனுக்கு படைத்து பூஜைகளை செய்வார்கள். குறிப்பாக தமிழ் புத்தாண்டு அன்று செய்யப்படும் பச்சடி மிகவும் விசேஷம். வேப்பம்பூ, மாங்காய், மிளகாய், வெள்ளம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து இந்த பச்சடி செய்யப்படும்.

புத்தாண்டு அன்று இந்த பச்சடி செய்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம், சுவைகளில் எப்படி இனிப்பு, கசப்பு, புளிப்பு, காரம் என இருக்கிறதோ அதேபோல் வாழ்க்கையிலும் இன்பம், துன்பம், சுகம், துக்கம் என அனைத்தும் இருக்கும். அதை மனிதர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தாத்பரியத்தை புரிய வைக்கும் விதமாக இந்த பச்சடி செய்யப்படுகிறது.

இரண்டாம் காரணம் சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். இந்த காலக்கட்டத்தில் பல வகை உடல்நல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதை தடுக்க உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்பம்பூ, மாங்காய் ஆகியவற்றை கொண்டு இந்த பச்சடி செய்யப்படுகிறது. புத்தாண்டு மட்டுமல்லாமல் சித்திரை மாதம் முழுவதும் இந்த பச்சடியை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதாகும்.

தமிழ் புத்தாண்டு அன்று புதிதாக உப்பு, மஞ்சள், அரிசி, கற்கண்டு போன்ற பொருட்களை வாங்க வேண்டும். மகாலட்சுமி வாசம் செய்வதாகவும், மங்கள பொருட்களாகவும் கருதப்படும் இந்த பொருட்களை தமிழ் புத்தாண்டு தினத்தில் வாங்கி வீட்டில் வைத்தால் அந்த ஆண்டு முழுவதும் வீட்டில் எந்த குறையும் இன்றி சுபிட்சம் நிலவும் என்பது நம்பிக்கை.

தமிழ் புத்தாண்டு அன்று பசு மாட்டிற்கு அகத்திக் கீரை, அரிசி மற்றும் கோதுமையால் ஆன உணவுப் பொருட்களை வழங்கலாம். வீட்டில் புத்தாண்டு கொண்டாடும் அதே வேளையில் மக்கள் தங்களால் முடிந்த வரை ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்வது நன்மையை தரும்.

தமிழ் புத்தாண்டு தினமானது பண்டைய காலத்தில் இருந்தே தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பாரம்பரியத்தை மாற்றி அமைக்க சில நாச சக்திகள் முயற்சி செய்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அரசியல் உள்நோக்கத்துடன் மக்களை குழப்பி தமிழர்களின் பாரம்பரிய வழிமுறைகளை மாற்றி அமைக்க இவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் நம்முடைய பண்டைய கால பாரம்பரியத்தையும் மக்கள் நம்பிக்கையையும் அழிப்பது அவ்வளவு சுலபமல்ல. தமிழர்களும் தங்கள் முன்னோர்கள் காட்டிய வழிமுறைகள் மீது நம்பிக்கை வைத்து இதுபோன்ற சதிகளை முறியடிக்க வேண்டும்.

வரபோகும் சோபகிருது ஆண்டு தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் பல நன்மைகளை வழங்கும் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.


Share it if you like it