பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் பா.ஜ.க. கூட்டணிக்கு வரவேண்டும்… தமிழருவி மணியன் அழைப்பு..!

பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் பா.ஜ.க. கூட்டணிக்கு வரவேண்டும்… தமிழருவி மணியன் அழைப்பு..!

Share it if you like it

நாட்டு நலனில் அக்கரை கொண்டு, பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் பா.ஜ.க. கூட்டணிக்கு வரவேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

காமராஜர் மக்கள் கட்சி சார்பில், பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சி சாதனை மலர் வெளியிட்டு விழா மதுரை திருநகரில் நடந்தது.  இதில், காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பிறகு, தமிழருவி மணியன், அண்ணாமலை, ஜி.கே.வாசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தினர். அப்போது தமிழருவி மணியன் பேசுகையில், “நாட்டின் நலன் கருதி மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் வர வேண்டும். சிறுபான்மையினருக்கும் அரனாக உள்ள அரசு மத்திய மோடி அரசு.

தமிழகத்தில் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கின்றனர். நெல்லை எம்.பி. ஒரு கிறித்தவ பாதிரியாரை தாக்குகிறார். இதில் யார் சிறு பான்மையினருக்கு ஆதரவாக உள்ளனர்? என உங்களுக்கே தெரியும். நாட்டு நலனில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பதால்தான் நாங்கள் அடுத்த முறையும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும் என்று கூட்டணி அமைத்துள்ளோம். பா.ஜ.க. கூட்டணியில் காமராஜர் மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், ஐ.ஜே.கே., சமூக நீதிக் கட்சி, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அதேபோல, பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் நாட்டு நலனில் அக்கரை கொண்டு பா.ஜ.க. கூட்டணிக்கு வர வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஜி.கே.வாசன், “2024-ல் மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசு அமையும். நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழுக்கு வேறு எந்த அரசும் கொடுக்காத முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் கொடுத்து வருகிறார். கர்நாடகாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து பங்கேற்பவர்கள், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்த விட வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் தமிழக மக்கள் ஏற்பார்கள். காவிரி டெல்டா பகுதிக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு காவிரி நீர்தான் குடிநீர் ஆதாரமாக உள்ளது” என்றார்.


Share it if you like it