பாகுபலி படத்தில் அமரேந்திர பாகுபலியான அப்பாவுக்கும், மகேந்திர பாகுபலியான மகனுக்கு அடிமையாக இருப்பது கட்டப்பா கேரக்டர். அதேபோல, கருணாநிதி அமைச்சரவையிலிருந்து அவரது மகன் ஸ்டாலின் அமைச்சரவையிலும் இருக்கும் துரைமுருகன், கொள்ளுப்பேரன் இன்பநிதி கூடவும் இருப்பேன் என்று கூறியிருக்கிறார். இதனால், துரைமுருகனை கட்டப்பாவாக சித்தரித்து கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
விஷயம் இதுதான்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், தனது துறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். அப்போது, “நீண்ட நெடுங்காலம் தி.மு.க.வில் இருப்பவன். இனிவரும் காலங்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப்போகிறவன் நான். அப்போது எனது கல்லறையில் ஒரு வரி எழுதினால் போதும். ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என்று எழுத வேண்டும்” என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு, “நீங்கள் 100 ஆண்டுகள் நன்றாக இருப்பீர்கள்” என்றார்.
உடனே துரைமுருகன், “ஆமா, இருப்பேன்” என்றவர் ஒரு கதை சொல்லத் தொடங்கினார். “சண்டைக்குப் பிறகு ஆளுநர் அழைத்த தேநீர் விருந்தில் நானும் முதல்வரும் கலந்துகொண்டோம். அப்போது, ஆளுநர் என்னோட வயசு பத்தி கேட்டார். முதலமைச்சரோ, ‘அவர் என் அப்பாவோடு 53 ஆண்டுக்காலம் இருந்தவர், இப்போது என்னோடு இருக்கிறார், உதயாவோடும் இப்போது இருக்கிறார்’ என்றார். அதற்கு நான் சொன்னேன், ‘உதயாவுக்கு ஒரு பையன் இருக்கான், அவனோடவும் நான் இருப்பேன்’ என்றேன்” என்றார். துரைமுருகன் இப்படிச் சொன்னதும் அவையில் முதல்வர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் வெடித்துச் சிரித்தனர்.
இந்த விவகாரம்தான் தற்போது நெட்டிசன்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது. பாகுபலி படத்தில் வரும் கட்டப்பா கேரக்டருடன் துரைமுருகனை தொடர்புபடுத்தி கலாய்த்து வருகிறார்கள்.