தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 168 நாட்கள் பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார்.
என் மண் என் மக்கள் என்கிற பெயரில், தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் மொத்தம் 1,700 கிலோ மீட்டர் தூரம் 168 நாட்கள் பாதயாத்திரை செல்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவர், இரவு நேரங்களில் ஓய்வெடுக்க பிரம்மாண்ட சொகுசு வாகனமும் பின்னே செல்கிறது. இப்பயணத்தின்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கி சொல்கிறார் அண்ணாமலை. இந்த பாதயாத்திரை இன்று மாலை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி இருக்கிறது. இப்பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் வந்து துவக்கி வைத்தார்.
முன்னதாக பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். மேலும், கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஐ.ஜே.கே. பாரிவேந்தர், த.மா.கா. ஜி.கே.வாசன், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அதேபோல, 10,000-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்புக்காக 2,000 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.