ஜார்க்கண்ட் மாநில கவர்னராக பா.ஜ.க. மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்!

ஜார்க்கண்ட் மாநில கவர்னராக பா.ஜ.க. மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்!

Share it if you like it

இந்தியாவிலுள்ள 13 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அந்த வகையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநில கவர்னராக இருந்த பகத் சிங்கோஷியாரி, லடாக் கவர்னராக இருந்த ராதாகிருஷ்ணன் மாத்தூர் ஆகியோர் தங்களது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இந்த சூழலில், 13 மாநிலங்களுக்கு புதிதாக கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இருந்த ரமேஷ் பயஸ், மகாரஷ்டிரா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநில கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். மணிப்பூர் மாநில கவர்னராக இருந்த இல.கணேசன், நாகலாந்து மாநில கவர்னராக மாற்றப்பட்டிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநில கவர்னராக இருந்த சுஸ்ஸ்ரீ அனுசுயா, மணிப்பூர் மாநில கவர்னராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஆந்திர மாநில கவர்னராக இருந்த ஸ்ரீபிஸ்வா பூசன் ஹரிசந்தன், சத்தீஸ்கர் மாநில கவர்னராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஆந்திர மாநில கவர்னராக ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அருணாச்சல பிரதேச மாநில கவர்னராக இருந்த பிரிக் ஸ்ரீபி.டி மிஸ்ரா, லடாக்கின் லெப்டினட் கவர்னராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு பதிலாக அருணாச்சலப் பிரதேச மாநில கவர்னராக கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக் நியமிக்கப்பட்டிருக்கிறார். சிக்கிம் மாநில கவர்னராக ஸ்ரீலக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதேபோல, இமாச்சலப் பிரதேச மாநில கவர்னராக இருந்த ஸ்ரீராஜேந்திர விஸ்வநாத அர்லேகர், பீகார் கவர்னராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு பதிலாக இமாச்சலப் பிரதேச மாநில கவர்னராக ஸ்ரீஷிவ் பிரதாப் சுக்லா நியமிக்கப்பட்டிருக்கிறார். அஸ்ஸாம் மாநில கவர்னராக ஸ்ரீகுலாப் சந்த கட்டாரியா நியமிக்கப்பட்டிருக்கிறார். பீகார் மாநில கவர்னராக இருந்த ஸ்ரீபாகு சவுகான், மேகாலயா கவர்னராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்”. இவ்வாறு ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவராகவார். தமிழக பா.ஜ.க. தலைவராக பதவி வகித்திருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன், 2 முறை கோவை எம்.பி.யாக இருந்திருக்கிறார். மேலும், 2016 முதல் 2019 வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராகவும் இருந்தவர். தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் கவர்னராக நியமிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. ஏற்கெனவே, தமிழக பா.ஜ.க. தலைவர்களாக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் ஆகியோர் கவர்னர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பா.ஜ.க. டெல்லி தலைமை தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது தெளிவாகிறது.


Share it if you like it