தொட்டுவிடும் தூரத்தில்தான் 2024 தேர்தல்… தி.மு.க.வை தெறிக்கவிட்ட வால்போஸ்டர்!

தொட்டுவிடும் தூரத்தில்தான் 2024 தேர்தல்… தி.மு.க.வை தெறிக்கவிட்ட வால்போஸ்டர்!

Share it if you like it

விடியலை எதிர்பார்த்தோம்; ஏமாற்றமே மிஞ்சியது. தொட்டு விடும் தூரத்தில்தான் 2024 தேர்தல் என்று ஏ.ஐ.டி.யு.சி. விடுத்திருக்கும் எச்சரிக்கையால், தி.மு.க. அரசு ஆட்டம் கண்டுபோய் இருக்கிறது.

2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க. தரப்பலி பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அந்த வகையில், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மேற்கண்ட கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தங்களது கோரிக்கைகளை தி.மு.க. அரசு புறம்தள்ளியதால் அதிருப்தியில் இருந்த போக்குவரத்துக் கழக ஊழியர்கள், கடந்த மாதம் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தீபாவளிக்கு போனஸ், அரியர் பணம் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான எந்த அறிவிப்பையும் தி.மு.க. அரசு வெளியிடவில்லை.

இதையடுத்து, தங்களது அதிருப்தியை போஸ்டர் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் போக்குவரத்துக் கழக ஊழியர்கள். இதுகுறித்து, திருநெல்வேலி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் அச்சடித்து ஒட்டியிருக்கும் போஸ்டரில், ‘விடியலை எதிர்பார்த்தோம்… ஏமாற்றமே உள்ளது’ என்கிற தலைப்பில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். மேலும், அப்போஸ்டரில், ’10 சதவீதம் போனஸ், நான்கு ஆண்டு ஊதிய ஒப்பந்தம், அரியர் கிடையாது, ஓய்வூதிய பணப்பலன், பஞ்சப்படி உயர்வு வழங்கவில்லை, தனியார் மய நடவடிக்கை’ என்று குறிப்பிட்டிருக்கும் தொழிற்சங்கத்தினர், நிறைவாக ‘2024 தேர்தல் தொட்டுவிடும் துாரத்தில்’ என்று குறிப்பிட்டு, தங்களது எச்சரிக்கையை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த போஸ்டர், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் மூலம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது. இதுதான் தி.மு.க.வை ஆட்டம் காண வைத்திருக்கிறது. காரணம், தி.மு.க. கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாவது, சில விவகாரங்களில் அவ்வப்போது தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், தி.மு.க.வின் அனைத்து செயல்களுக்கும் பூம்பூம் மாடுபோல தலையாட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஒருபோதும் தி.மு.க.வை எதிர்த்து குரல் கொடுத்ததில்லை. அப்படியிருக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரே தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருப்பதுதான் தி.மு.க.வின் அச்சத்திற்கு காரணம் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.


Share it if you like it