இ.டபுள்யூ.எஸ். இட ஒதுக்கீடு… ஆதரிக்கும் தி.மு.க. அரசு?!

இ.டபுள்யூ.எஸ். இட ஒதுக்கீடு… ஆதரிக்கும் தி.மு.க. அரசு?!

Share it if you like it

தேர்தல் பிரசாரத்தின்போது அனைத்து பெண்களுக்கும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த தி.மு.க. அரசு, தற்போது தகுதி அடிப்படையில்தான் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இது பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தி.மு.க. இந்த செயல்பாடு பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதுபோல் இருக்கிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு உரிமைத்தொகையாக மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது அக்கட்சித் தலைமை. ஆனால், ஆட்சிக்கு வந்த 2 வருடங்கள் ஆகியும் உரிமைத்தொகை வழங்கப்படாததால், தி.மு.க. அரசு மீது பெண்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இதனிடையே, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வந்ததால், இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி, பட்ஜெட் தாக்கலின்போது வரும் செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும், இதற்காக 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக ஒரு நீண்ட விளக்கத்தைத் தர விரும்புகிறேன். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக 7,000 கோடி ரூபாய் இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, யார் யாருக்கெல்லாம் உரிமைத்தொகை கிடைக்கும் என்று எல்லோரும் மனக்கணக்கு போட்டுக் கொண்டு வருகிறார்கள். உரிமைத்தொகை திட்டம் 2 நோக்கங்களை கொண்டது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். குடும்பத் தலைவிகளின் உழைப்பை அங்கீகரிக்கவே மகளிர் உரிமைத்திட்டம். பெண்களின் வங்கிக் கணக்கிற்கே மகளிர் உரிமைத்தொகை செலுத்தப்படும். மீனவப் பெண்கள், சிறு கடை வைத்திருக்கும் பெண்கள், ஒரே நாளில் பல்வேறு இல்லங்களில் பணிபுரியும் பெண்கள், கட்டட பணியாளர்கள், சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள் ஆகியோர் பயனடைவர் என்று கூறியிருக்கிறார்.

இதுதான் பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியாக அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகு வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது தகுதி அடிப்படையில்தான் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பது எந்த விதத்தில் நியாயம். அதேபோல, வசதி படைத்தவர்களுக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை இல்லை என்று அறிவித்திருப்பதின் மூலம் தி.மு.க. அரசு, பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறதா? மத்திய அரசும் இதைத்தானே கூறிவருகிறது. அப்படியென்றால், இனி கல்வி, அரசு வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவற்றிலும் பொருளாதார இட ஒதுக்கீட்டையே பின்பற்றுவார்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். பதில் சொல்வாரா முதல்வர் ஸ்டாலின்?


Share it if you like it