தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு, அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்குவதோடு சரி. மற்றபடி, காய்கறி முதல் மசாலா பொருட்கள் வரை கைக்காசைத்தான் போட்டு செலவு செய்து வருகிறோம் என்று சத்துணவு அமைப்பாளர்கள் குமுறி வருகிறார்கள்.
ஏழை மாணவர்கள் வேலைக்குச் செல்வதை தவிர்த்து, கல்வி பயில வரவேண்டும் என்பதற்காக 1955-ம் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் காமராஜர். இதன்பிறகு, மாணவர்களுக்கு சத்தாண உணவை வழங்க வேண்டும் என்கிற நோக்கில் சில மாறுதல்களை செய்து சத்துணவுத் திட்டம் என்கிற பெயரில் 1982-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து வந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மேலும் பல மாற்றங்களை செய்தனர். இந்த சத்துணவுத் திட்டதுக்குத் தேவையான அரிசி, பருப்பு ஆகியவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதேபோல, எண்ணெய், காய்கறி, விறகு, மசாலா பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க மானியம் வழங்கி வருகிறது.
அந்த வகையில், தற்போது சத்துணவுத் திட்டத்துக்குத் தேவையான அரிசி, பருப்புடன் எண்ணெயையும் சேர்த்து தமிழக அரசு வழங்கி வருகிறது. காய்கறி, விறகு, மசாலா உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு தொடக்கப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவருக்கு ரூ.2.28 மற்றும், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.2.42 மானியமாக வழங்கி வருகிறது. இந்த மானியத்தொகைதான் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை என்று சத்துணவு அமைப்பாளர்கள் குமுறி வருகின்றனர். இதனால், தங்களது கைக்காசை போட்டு செலவு செய்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள் சிலரிடம் பேசியபோது, “சத்துணவுத் திட்டத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை அரசே நேரடியாக வழங்குகிறது. மீதமுள்ள அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், விறகு, மசாலா பொருட்கள் சத்துணவு அமைப்பாளர்களால் வாங்கப்படுகிறது. இதற்காக, தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.2.28-ம், மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.42-ம் மானியமாக அரசு வழங்குகிறது. இந்த மானியத்தொகைதான், கடந்த 4 மாதங்களாக எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆகவே, எங்களது சொந்த பணத்தில் இருந்து வாங்க வருகிறோம். இதனால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது” என்றார்கள்.
மேலும் சிலர் கூறுகையில், “தொடக்கப்பள்ளிகளை பொறுத்தவரை, 100 குழந்தைகளுக்கு சமைக்க வேண்டுமானால், தினமும் விறகுக்கு மட்டும் சுமார் 200 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், அரசாங்கம் நாளொன்றுக்கு வெறும் 52 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. இதேபோலதான், காய்கறி, மசாலா பொருட்கள் வாங்குதிலும், அரசு கொடுக்கும் தொகை மிகவும் சொற்பமே. உதாரணமாக, ஒரு சத்துணவு அமைப்பாளர் மாதம் ஒன்றுக்கு ஒரு பள்ளிக்கு மட்டும் காய்கறி, விறகு, மசாலா பொருட்களுக்கு 15,000 ரூபாய் செலவிடுகிறார். ஆனால், இதில் பாதிதான் அரசு வழங்குகிறது. இந்த காசையாவது குறிப்பிட்ட காலத்தில் வழங்கினால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அரசுதான் மனது வைக்க வேண்டும்” என்கிறார்கள்.
அடபாவத்த!