நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. இதன் மூலம் ஏழைகளின் தரமான கல்விக்கு திராவிடக் கட்சிகள் வேட்டு வைத்திருக்கின்றன.
நாடு முழுவதும் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வந்தாலும், தனியார் பள்ளிகள் பெருகிய பிறகு, ஏழை மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்கவில்லை. இதை மனதில் கொண்டும், பின்தங்கிய மக்களுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்கிற நோக்கிலும், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியால் 1985-ல் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ஜவஹர் நவோதயா பள்ளித் திட்டம். இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நவோதயா பள்ளிக் கூடத்தைத் துவங்க முடிவு செய்யப்பட்டது. இதன், சிறப்பம்சம் என்னவென்றால், இந்த நவோதயா உண்டு, உறைவிடப் பள்ளிகளாகும். இத்திட்டம் 1986-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையில் உள்ளடக்கப்பட்டது. இப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க முடியும்.
முதல்கட்டமாக ஹரியானாவின் ஜஜ்ஜர், மகாராஷ்டிராவின் அமராவதி ஆகிய 2 இடங்களில் நவோதயா பள்ளிக் கூடங்கள் துவங்கப்பட்டன. இத்திட்டம் துவங்கப்பட்டபோது, தமிழ்நாடும், மேற்கு வங்கமும் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தன. காரணம், இப்பள்ளிக் கூடங்களில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. அதாவது, வழக்கமாக முதல் பாடம் தாய்மொழி, இரண்டாவது பாடம் ஆங்கிலம், மூன்றாவதாக ஹிந்தியோ அல்லது தாங்கள் விரும்பும் மொழியையோ படித்துக் கொள்ளலாம். தவிர, 8-ம் வகுப்புக்கு மேல் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில்தான் பாடங்கள் கற்பிக்கப்படும். இதனால், நவோதயா பள்ளிகள் ஹிந்தியைத் திணிப்பதாகக் கூறி, தமிழகமும், மேற்குவங்கமும் எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும், காலப்போக்கில் நவோதயா பள்ளிகளின் சிறப்பை அறிந்து, மேற்குவங்க மாநிலத்திலும் இப்பள்ளிக்கூடங்களை துவங்குவதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்தது.
ஆனால், தமிழக அரசு மட்டுமே தற்போதுவரை அனுமதி வழங்கவில்லை. தற்போது இந்தியா முழுவதும் 576 மாவட்டங்களில் 598 நவோதயா பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேசமயம், தமிழகத்தில் ஒரு பள்ளிகள் கூட இல்லை என்பதுதான் வேதனை. இதையடுத்து, தமிழ்நாட்டிலும் நவோதயா பள்ளிக்கூடங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி, குமரி மகா சபா என்ற அமைப்பு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கு உத்தரவிட்டதோடு, இப்பள்ளிகளுக்காக மாவட்டம்தோறும் 30 ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் வரை 240 மாணவர்கள் பயிலும் வசதியுள்ள கட்டத்தை ஒதுக்கீடு செய்து தருவது குறித்து 8 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
ஆனால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தி.மு.க., திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கலகக்குரல் எழுப்பின. அதேசமயம், தமிழக காங்கிரஸ் கட்சி மட்டும் நவோதயா பள்ளிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தது. இதனிடையே, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று தி.மு.க. ஆட்சியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க.வும் நவோதயா பள்ளிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தது. எனவே, இத்தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இவ்வழக்கில் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்த நீதிபதிகள், மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்ததோடு, நவோதயா பள்ளி தொடர்பாக 21 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இத்தீர்ப்பு வெளியாக 4 ஆண்டுளுக்கு மேலாகியும் இதுவரை தமிழக அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதன் மூலம், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக தரமான கல்வி கிடைத்து விடக்கூடாது என்பதில் திராவிட மாடல் ஆட்சி உறுதியாக இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகிறது. இதன் காரணமாக, நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் மருத்துவ மாஃபியாக்களின் கல்விக் கொள்ளைக்கு துணைபோவது போல, தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளைக்கும் திராடவிட மாடல் ஆட்சி துணைபோகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.