வைகோ மகன் போட்ட குண்டு… தி.மு.க. கூட்டணியில் விரிசல்?!

வைகோ மகன் போட்ட குண்டு… தி.மு.க. கூட்டணியில் விரிசல்?!

Share it if you like it

ஆட்சி அதிகாரத்தை நோக்கியே நமது பயணம் இருக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரைவையாபுரி பேசியது தி.மு.க. கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

தி.மு.க.வின் போர்வாளாக இருந்தவர் வைகோ என்று அழைக்கப்படும் வை.கோபால்சாமி. கருணாநிதிக்குப் பிறகு தி.மு.க.வின் தலைவர் இவர்தான் என்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் பரவலாகப் பேசப்பட்டது. இதனால், தனது மகனுக்குக் கிடைக்க வேண்டிய மணிமகுடம் வைகோவுக்கு போய்விடுமோ என்று அஞ்சினார் அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதி. இதனால், வைகோவை கட்டம் கட்டிய கருணாநிதி, ஒரு கட்டத்தில் வீண் பழிசுமத்தி வைகோவை வெளியேற்றினார்.

இதைத் தொடர்ந்து, 1993-ம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.) என்கிற கட்சியைத் தொடங்கினார் வைகோ. அப்போது, வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ வெளியேறியதாகக் கூறப்பட்டது. மேலும், தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பார்க்கப்பட்ட கட்சியாக ம.தி.மு.க. இருந்தது என்றால் மிகையாகாது. ஆனால், வைகோவின் நிலையற்ற தலைமையால் நிர்வாகிகளும் தொண்டர்களும் குழப்பத்தில் தவித்தனர்.

குறிப்பாக, தி.மு.க.வை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, 2004-ம் ஆண்டு தி.மு.க.வுடனேயே கூட்டணி வைத்ததால் நிர்வாகிகளும் தொண்டர்கள் விரக்தியடைந்தனர். இதனால், பலரும் மாற்றுக் கட்சிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினார்கள். இதன் காரணமாக கட்சி சிதறுண்டு போனது. ஆகவே, இருக்கும் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தக்க வைக்க வைகோ படாதபாடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆகவே, மீண்டும் தி.மு.க. எதிர்ப்பு நிலையை எடுத்தார்.

ஆகவே, ம.தி.மு.க.வை நிர்கதியாக்கும் முயற்சியில் இறங்கியது தி..மு.க. தலைமை. இதை தாக்குப்பிடிக்க முடியாது வைகோ, நிபந்தனையின்றி தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமானார். தற்போது, அக்கட்சியில் சில எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் இருந்தாலும், தி.மு.க.வில் கட்சியை இணைக்காத குறையாகத்தான் இருந்து வருகிறார்கள். ஆனால், இந்த கூட்டணிக்குத்தான் குண்டு வைத்திருக்கிறார் வைகோவின் மகன் துரைவையாபுரி.

அதாவது, கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி நடந்த ம.தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைமைக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டார் துரைவையாபுரி. இதன் பிறகு, கட்சியை முழுவதுமாக மாற்றிக் கட்டமைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் துரை. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்று கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், கலந்துகொண்டு பேசிய துரை வைகோ, “இதுவரை நாம் செய்தது மக்களுக்கான அரசியல். இனி நாம் செய்யப்போவது நமக்கான அரசியல். அதாவது, ம.தி.மு.க.வுக்கான அரசியல். அதிகாரம் இல்லாமல் இங்கு எதையும் சாதிக்க முடியாது. ஆகவே, நமது பயணம் அதிகாரத்தை நோக்கி இருக்க வேண்டும். இன்னும் 2 ஆண்டுகள் எனக்கு டயம் கொடுங்கள். நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள். நிச்சயம் நமக்கு மறுமலர்ச்சி ஏற்படும்.

மேலும், 50,000 ரூபாய், 1 லட்சம் ரூபாய் செலவு செய்து தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் போடுவதை நிறுத்துங்கள். ஏனெனில், இதில் பங்கேற்கும் அனைவரும் ம.தி.மு.க.வினராகத்தான் இருப்பார்கள். ஆகவே, ரிசல்ட் ஜீரோவாகத்தான் இருக்கும். எனவே, இதற்கு பதிலாக மக்களுக்கு பயன்படுகிற விஷயங்களை செய்யுங்கள். அதற்கு முதலில் கட்சியை வைத்து உங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் செல்வாக்கை வைத்து கட்சிக்கு புது ஆட்களை கொண்டு வாருங்கள். இதுதான் கட்சியை வளர்க்கும் ஒரே நடைமுறை. உழைப்பற்கு நான் தயாராக இருக்கிறேன். நீங்களும் தயராகுங்கள். கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களுக்கான அங்கீகாரத்தையும், பதவியையும் வாங்கித் தருவதுதான் எனது பிரதான வேலை” என்று கூறியிருக்கிறார்.

துரை வைகோவின் இந்த பேச்சு தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் இருப்பதையே காட்டுகிறது. இதுதான் தி.மு.க.வினர் மத்தியில் விவாதப்பொருளாகி இருக்கிறது. நம்முடனேயே கூட்டணியில் இருந்துகொண்டு, நமக்கு எதிராகவே ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று கூறியிருக்கிறார்களே என்று கொந்தளிக்கிறார்கள் தி.மு.க.வினர். ஆகவே, துரை வைகோ போட்ட குண்டு விரைவில் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.


Share it if you like it