கலைத்திருவிழா என்கிற பெயரில் குத்தாட்டம்… மாணவிகளை சீரழிக்கும் திராவிட மாடல் அரசு!

கலைத்திருவிழா என்கிற பெயரில் குத்தாட்டம்… மாணவிகளை சீரழிக்கும் திராவிட மாடல் அரசு!

Share it if you like it

கலைத்திருவிழா என்கிற பெயரில் அயிட்டம் பாடல்களுக்கு குத்தாட்டம் போட வைத்து பள்ளி மாணவிகளை திராவிட மாடல் அரசு சீரழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தற்போது, அரசு அலுவலகங்களிலும் இந்த குத்தாட்ட வியாதி தொற்றிக்கொண்டிருப்பது வேதனையிலும் வேதனை.

கடந்தாண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்திலுள்ள அனைத்து துறைகளும் சீரழிந்து வருகின்றன. உதாரணமாக, சாலையின் நடுவே இருக்கும் மின்கம்பங்களை அகற்றாமலேயே சாலை போடுவது, சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தாமலேயே சாலை அமைப்பது, சாலையோரம் இருக்கும் ஆழ்துளை குடிநீர் குழாய்களை அகற்றாமலேயே கான்க்ரீட் ரோடு போடுவது ஆகிய அவலங்கள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கொட்டும் மழையில் சாலையில் அமைத்தும் சாதனை படைத்தனர். மேலும், பள்ளிகளில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் மூன்றே நாட்களில் இடிந்து விழுந்ததெல்லாம் வரலாறுகள். எல்லாவற்றுக்கும் மேலாக, கழிவுநீரை அகற்றாமலேயே கழிவுநீர் கால்வாய் அமைத்ததுதான் ஹைலைட்.

இது மட்டுமா? தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார சம்பவங்கள், செயின் பறிப்பு போன்ற குற்றச் செயல்களும் அதிகரித்திருக்கிறது. மேலும், தி.மு.க.வினரின் கட்டப்பஞ்சாயத்து களைகட்டுகிறது. அதோடு, அடுத்தவர் சொத்தை அபகரிப்பது, கடைகளில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் குஸ்தி போடுவது போன்ற அராஜக செயல்களும் அரங்கேறி வருகின்றன. இந்த சூழலில்தான், மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு, கலைத்திருவிழா என்கிற பெயரில் பள்ளிகளில் குத்தாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதாவது, பள்ளிகளில் மாணவர்களுக்கு நல்லொழுக்கக் கல்வி என்ற ஒன்று ஆரம்பத்தில் இருந்தது. இதன் வாயிலாக மாணவர்களுக்கு நற்போதனைகள் கற்பிக்கப்பட்டு வந்தன.

அதேபோல, தோட்டக்கலை, கைத்தொழில் என பல பாடப்பிரிவுகள் வைத்து மாணவர்களை அனைத்து துறைகளிலும் வல்லவர்களாகவும், நல்லவர்களாகவும் மாற்றி வந்தனர். ஆனால், இந்த கல்விமுறைகள் தற்போது இல்லை. மாறாக, வெறும் பாடங்களை மட்டுமே நடத்தி மாணவர்களை வெறும் ஜடப்பொருளாகவே வைத்திருக்கிறார்கள். தவிர, ஆண்டு இறுதியில் ஆண்டுவிழா நடத்தப்படும். அப்போது, மாணவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட நாடகங்களையும், கருத்துமிக்க பாடல்களை பாடியும், நல்ல பாடல்களுக்கு நடனமாடியும் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள். ஆனால், இதுபோன்ற நல்ல பழக்கவழக்கங்களை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, தற்போது கலைத்திருவிழா என்றொரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது தமிழக பள்ளிக் கல்வித்துறை.

இந்த கலைத்திருவிழாவில்தான், பள்ளி மாணவிகளை அயிட்டம் சாங் எனப்படும் பாடல்களுக்கு குத்தாட்டம் போட வைத்து வருகிறார்கள். இதுதான் பல்வேறு தரப்பினர் மத்தியில் கடுமையான விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது. இந்தியாவில் தரமான கல்வியை வழங்குவதில் தமிழகம் 27-வது இடத்தில் இருப்பதாகவும், இதே நிலை நீடித்தால் கடைசி இடத்துக்குத்தான் செல்ல வேண்டும் என்றும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. மேலும், சினிமாவில் குரூப் டான்ஸ் ஆடுவதற்கு மாணவ, மாணவிகளை இப்போது தயார் செய்து வருகிறார்கள் என்கிற விமர்சனமும் எழுந்திருக்கிறது. தவிர, இதுபோன்ற சம்பவங்கள் மாணவ, மாணவிகளை சீரழிக்கிறது என்கிற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, அரசுத் துறைகள் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் தற்போது குத்தாட்டம் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. தற்போது, பொது சுகாதாரத்துறை சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும நோய்த்தடுப்புத்துறை சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்ட துணை சுகாதார இயக்குனர் டாக்டர் கீதாராணி, ‘ஏ மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே… எப்போ வரப்போற மச்சான் எப்போ வரப்போற’ என்கிற அயிட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.

இதைப் பார்த்துவிட்டு பலரும் போற போக்கப் பார்த்த சட்டசபையிலயே குத்தாட்டம் நடக்கும்போல என்று அங்கலாய்க்கிறார்கள்!


Share it if you like it