கரகாட்டக்காரன் மாடல் பேருந்தால், பயணிகள் தண்ணீரில் தத்தளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் இருக்கும் அரசுப் பேருந்துகளின் நிலை பற்றி கேட்கவே வேண்டாம். தினமும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஒரு பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பின் இரு பக்கமும் செல்கிறது. இன்னொரு பேருந்து கிழிந்த டயருடன் செல்கிறது. மற்றொரு பேருந்து சென்று கொண்டிருக்கும்போதே டயர் கழன்டு தனியாக ஓடுகிறது. அட இதாவது பரவாயில்லை, ஒரு பேருந்தில் படிக்கட்டே இல்லாமல் செல்கிறது. இன்னொரு பேருந்தில் சீட்டுக்கு அடியில் பலகையே இல்லாமல் செல்கிறது. இப்படி நித்தம் நித்தம் ஏதாவது ஒரு காய்லாங்கடை பேருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில், புதிதாக உதயமான திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து சென்ற பேருந்தில் மழைக்கு குடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. திருப்பத்தூரிலிருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து புறப்பட்டது. பேருந்து புறப்பட்டபோதே லேசாக மழை தூறல் போட்டுக் கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல மழை அதிகமானது. இதனால், பேருந்தின் மேல்புறம் மற்றும் கண்ணாடி ஜன்னல்கள் வழியாக மழை நீர் ஒழுகியது. இதனால், இருக்கைகளில் அமர முடியாமல் பயணிகள் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. வாணியம்பாடி வருவதற்கே, சுமார் 1 மணி நேரம் ஆகிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும், பேருந்தை விட்டு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பஸ்ஸின் டிரைவரும், கண்டக்டரும் திருப்பத்தூர் டெப்போவிலிருந்து மாற்றுப் பேருந்து அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால், அந்தப் பேருந்து வருவதற்கு 1 மணி நேரமானது. இதனால், பயணிகள் இரவு நேரத்தில் குழந்தைகளுடன் பரிதவிக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். இதில், இன்னொரு கொடுமை என்னவென்றால் சாதாரண பஸ்ஸில் 70 ரூபாய் கட்டணம். ஆனால், இப்பேருந்தில் 95 ரூபாய் கட்டணம் என்பதுதான். இதைக் கண்ட பலரும், கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி வைத்திருக்கும் கார், அடிக்கடி மக்கர் பண்ணுவதால் தள்ளக்கொண்டு செல்வதுபோல, அரசுப் பேருந்துகள் பலவும் மழை பெய்தால் ஒழுகும் பேருந்துகளாக இருக்கின்றன என்று கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது. தவிர, இது தி.மு.க. அரசின் கையாலாகாத தனத்தைக் காட்டுவதாக இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.