தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக கருத்துத் தெரிவிக்காமல், 356-வது பிரிவை பயன்படுத்தி தி.மு.க. ஆட்சியை கவர்னர் கலைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் கஞ்சா, பிரவுன் சுகர், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள், சர்வ சாதாரணமாக உலா வருகிறது. போதையால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. வணிகர்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். போதை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு சீராக்கப்பட வேண்டும். இது இந்த ஆட்சியில் நடக்க போவதில்லை. காரணம், ஸ்டாலின் நிர்வாகம் செய்யும் திறனற்றவர். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு முதலமைச்சராக இருக்கிறார்.
இந்த ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பது போன்ற குற்றங்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இதை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் முடியவில்லை. சட்ட விரோதமான செயல்களை செய்து வருகிற விடியாத அரசாங்கமாக தி.மு.க. இருக்கிறது. திராவிட மாடல் என்று கூறிவரும் தி.மு.க., திராவக மாடலை கொண்ட ஆட்சியைத்தான் செய்து வருகிறது. வேங்கை வயலில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் மலத்தை கலந்தவர்களை இன்னும் கண்டுபிடிக்காமல் இருக்கிறார்கள்.
கவர்னர் என்பவர் இம்மாநிலத்தின் முதல் குடிமகன். அப்படிப்பட்டவர் இந்த அரசு மீது பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார். சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமாக இருக்கிறது என்று கவர்னரே கூறுகிறார். ஆகவே, கருத்துச் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், மத்திய அரசின் 356-வது பிரிவை பயன்படுத்தி இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். இதை பரிந்துரை செய்தால் மட்டுமே உண்மையிலேயே கவர்னர் தன்னுடைய வேலையை செய்கிறார் என்று நாங்கள் நம்புவோம்” என்று கூறியிருக்கிறார்.