கோவிலில் பூப்பறித்த மூதாட்டியை தாக்கிய அர்ச்சகர்!

கோவிலில் பூப்பறித்த மூதாட்டியை தாக்கிய அர்ச்சகர்!

Share it if you like it

கோவிலில் இருந்த பூச்செடியில் பூப்பறித்த மூதாட்டியை, அர்ச்சகர் ஒருவர் அடித்து கீழே தள்ளிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை தள்ளாகுளம் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கு வருகிறது அய்யப்பன் கோவில். இது மதுரை கள்ளழகர் கோவிலின் உப கோவிலாகும். இக்கோவிலின் அர்ச்சகராக இருப்பவர் மாரிச்சாமி. கடந்த 3 வருடங்களாக இக்கோவிலில் பூஜை செய்து வரும் இவர், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த சூழலில், கோவிலில் பூப்பறிக்க வந்த மூதாட்டியை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி தாக்கிய வசமாக சிக்கி இருக்கிறார் அர்ச்சகர் மாரிச்சாமி.

விஷயம் இதுதான்… கடந்த பல வருடங்களுக்கு முன்பு இந்த அய்யப்பன் கோவிலில் எலுமிச்சை செடி, பூச்செடி மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகளை வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்தவர்களில் லட்சுமி என்கிற மூதாட்டியும் ஒருவர் என்று கூறப்படுகிறது. இந்த உரிமையில் அவ்வப்போது கோவிலுக்கு வரும் லட்சுமி பாட்டி, அங்கிருக்கும் பூச்செடிகளில் பூத்திருக்கும் பூக்களை பறித்து சுவாமிக்கு பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அந்த வகையில், சம்பவத்தன்றும் வழக்கம்போல பூச்செடியில் இருந்த பூக்களை லட்சுமி பாட்டி பறித்திருக்கிறார். இதைக்கண்ட அர்ச்சகர் மாரிச்சாமி, விறுவிறுவென வந்து லட்சுமி பாட்டியை திட்டி இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி பாட்டியும், பதிலுக்கு மாரிச்சாமியைத் திட்ட, இருவருக்கும் இடையை வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதைக்கண்ட கோவிலுக்கு வந்த பக்தர்கள், இருவரையும் சமாதானப்படுத்த முயன்றிருக்கின்றனர். ஆனால், அர்ச்சகர் மாரிச்சாமி அடங்குவதாக இல்லை. லட்சுமி பாட்டியை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியதோடு, அடித்துக் கீழே தள்ளிவிட்டார். மேலும், பாட்டியை தரதரவென இழுத்துச் சென்று கோவிலுக்கு வெளியே தள்ள முயன்றார். ஆனால், இடையிலேயே லட்சுமி பாட்டி நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதைக் கண்ட பக்தர்கள், இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அர்ச்சகர் மாரிச்சாமியின் இத்தகைய செயலை கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விட்டார். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த சமூக ஆர்வலர்களும், பக்தர்களும், அர்ச்சகர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாரிச்சாமி தி.மு.க. ஆட்சியில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட முதல் அர்ச்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it