தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை குறை கூறியதால் விவசாயியிடமிருந்து மைக் பறிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. இதேபோல, விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரின் குறைகள் தொடர்பாகவும் கூட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய பெரும்பாலான விவசாயிகள் மின்வெட்டு குறித்தும், மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
இதைத் தொடர்ந்து, செம்பனார்கோயில் அருகேயுள்ள மேலப்பாதி நடுக்கரையைச் சேர்ந்த விவசாயி திருஞானசம்பந்தம் பேசினார். அப்போது, “காவிரிக்கரையில் டாஸ்மார்க் கடை செயல்படுகிறது. அங்கு காலை 6 மணிக்கு துவங்கி இரவு 12 மணி வரை சட்ட விரோதமாக மதுபான விற்பனை நடக்கிறது. இங்கு குடித்து விட்டுச் செல்லும் போதை ஆசாமிகள் வயலில் வேலை பார்க்கும் பெண் கூலித் தொழிலாளர்களிடம் அத்துமீறி நடந்து கொள்கின்றனர். இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம், போலீஸ், வருவாய்த் துறை ஆகிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சட்ட விரோத பார், தி.மு.க. மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நந்தினியின் கணவருமான ஸ்ரீதர் என்பவரால் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் டாஸ்மாக் உட்பட எந்தத் துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்” என்று கூறினார்.
இப்படி தொடர்ந்து ஆளும் கட்சியையே குறைசொல்லி திருஞானசம்பந்தம் பேசிக் கொண்டிருந்ததால் அப்செட்டான அதிகாரிகள், உங்கள் குறைகளை மனுவாக எழுதிக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு, அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக மைக்கை பிடுங்கிச் சென்றார்கள். இதைப் பார்த்த மற்ற விவசாயிகள், ஆளும் கட்சியின் குறைகளை சுட்டிக் காட்டவே கூடாது போல. இது என்ன ஜனநாயக ஆட்சியா அல்லது மன்னர் ஆட்சியா என்று கேள்வி எழுப்பியபடியே கலைந்து சென்றனர். கழக ஆட்சின்னா அப்படித்தான் இருக்கும் என்று அப்பாவி விவசாயிகளுக்கு தெரியவில்லை…