தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 80 ரூபாய் கேட்டு அதிகாரிகளுடன் சேர்ந்து ஆளும் கட்சியான தி.மு.க.வினரும் அடாவடி செய்வதால், விவசாயிகள் நொந்து நூடுல்ஸாகி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடும் என்பதும், கொலை, கொள்ளை, ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து ஆகியவை அதிகரிக்கும் என்பது மக்கள் மத்தியில் நிலவி வரும் பொதுவான கருத்து. இதை மெய்ப்பிக்கும் வகையில், தமிழகத்தில் 2021 மே மாதம் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்தே, கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம், பாலியல் பலாத்காரங்கள், மத மாற்றம் ஆகியவை எல்லை மீறி வருகின்றன. அதேபோல, லஞ்சமும், ஊழலும் தலைவிரித்து ஆடிவருகிறது.
இந்த நிலையில்தான், தி.மு.க.வினர் விவசாயிகள் வயிற்றிலும் அடிப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது, தமிழகத்தில் கடந்தாண்டு பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால், மாநிலம் முழுவதுமே விவசாயிகள் பயிர் நடவு செய்திருந்தனர். தை மாதம் முதல் அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து, விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்காக தமிழகம் முழுவதும் கொள்முதல் நிலையங்களை திறந்திருக்கிறது தமிழக அரசு. இங்குதான் பல்வேறு அவலங்கள் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
அதாவது, நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளை கொண்டு வரும் விவசாயிகளிடமிருந்து உடனடியாக நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனராம். இதனால், சமீபத்தில் பெய்த கோடை மழையில் ஏராளமான நெல் மூட்டைகள் மழையில் நனைத்து வீணாகி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. விவசாயிகளின் நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டுமென்றால் அதிகாரிகளை தனியாக கவனிக்க வேண்டுமாம்.
இது ஒருபுறம் இருக்க, விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு, அதிகாரிகள் பணமே வாங்கக் கூடாது. ஆனால், மூட்டைக்கு இவ்வளவு என்று பணம் நிர்ணயித்து வசூலித்து வருகிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மூட்டைக்கு 20 முதல் 40 வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டு தி.மு.க. ஆட்சியில் மூட்டைக்கு 60 முதல் 80 ரூபாய் வரை கட்டாய வசூல் செய்யப்படுகிறதாம். இதை தர மறுக்கும் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதில்லையாம். கேட்டால், நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது. காயவைத்து கொண்டு வா. நெல்லில் கல்லும் மண்ணும் அதிகமாக இருக்கிறது. தூசு தட்டிக் கொண்டு வா என்று அலைக்கழிக்கிறார்களாம்.
இதனால், விவசாயிகள் வேறு வழியின்றி பணத்தை தெண்டம் கட்டி அதிகாரிகளுக்கு அழுது வருகிறார்களாம். இதில் ஹைலைட் என்னவென்றால், கூடுதல் கப்பம் வசூலுக்கு அதிகாரிகளும், நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களும் சொல்லும் காரணம்தான். அதாவது, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நெல் கொள்முதல் செய்யும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் மட்டுமே பணம் வசூல் செய்யப்பட்டதாம். ஆனால், தற்போது அந்தந்தப் பகுதி தி.மு.க. நிர்வாகிகளும் தங்களுக்கும் கமிஷன் தரவேண்டும் என்று கறார் காட்டுகிறார்களாம். இதன் காரணமாகவே, விவசாயிகளிடம் கூடுதலாக பணம் வசூலிப்பதாகக் கூறியிருக்கிறார்கள. இதனால், விவசாயிகள் தி.மு.க.வினர் மீது அதிருப்தி பிளஸ் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.