பா.ஜ.க.வுக்கு ஆதரவாக முகநூலில் பதிவு செய்துவந்த போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சுரேஷ். இவர், தனது முகநூல் பக்கத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவான செய்திகள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தி.மு.க.வினர் புகார் செய்யவே, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து, ஏட்டு சுரேஷின் முகநூல் பக்கத்தை சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு செய்து வந்தனர். இதில், பா.ஜ.க.வுக்கு ஆதரவான செய்திகள், வீடியோக்களை சுரேஷ் பகிர்ந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, போலீஸ் துறையின் விதிகளை மீறியதாக ஏட்டு சுரேஷை, மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும், ஏட்டு சுரேஷின் முகநூலில் நண்பர்களாக இருந்த சிவசேனா மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி உட்பட 7 பேரிடம் விசாரணை நடத்தவும் போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி, சி.கே.பாலாஜி உள்ளிட்டோர் நேற்று ஏ.டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால், அவர்களிடம் விசாரணை நடத்தாமல் போலீஸார் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த சூழலில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏட்டு சுரேஷை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி சிவசேனா சார்பில் எதிர்வரும் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி தெரிவித்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துத் தெரிவித்த ஏட்டு மீது காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா கொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரவன். பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர், தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே 20-ம் ரிலீஸான நிலையில், இப்படம் வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்து ப்ளக்ஸ் போர்டு வைத்திருந்தார். ஆனால், இவர் மீது போலீஸார் எவ்வித சஸ்பெண்ட் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.