ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று திரண்டு டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஏழை, எளிய மக்களுக்கு பெரும் துயரமாக இருப்பது டாஸ்மாக் கடைகள்தான். அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் ஏராளமானோர் அன்றையதினம் வாங்கும் சம்பளத்தை, அன்றையதினம் மாலையிலேயே டாஸ்மாக் கடைக்குச் சென்று சரக்கடித்துவிட்டு அழித்து வருகின்றனர். இதனால், லட்சக்கணக்கான குடும்பங்கள் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் தவித்து வருகின்றன. இப்படி குடித்து குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு பலரும் இறந்து விடுவதால் ஏராளமான பெண்கள் தாலியை இழந்து பறிதவித்து வருகின்றனர். அக்குடும்பமும் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறது.
கடந்த காலங்களில் இப்படித்தான் லாட்டரி என்கிற அரக்கன் தமிழக அப்பாவி மக்களின் உயிரைக் குடித்து வந்தான். லாட்டரி சுரண்டி சுரண்டியே பெரும் கடனாளியாகி ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்ட அவலம் அரங்கேறியது. இதனால், நூற்றுக்கணக்கான பெண்கள் தாலியை இழந்து தவித்தனர். இதையடுத்து, லாட்டரி சீட்டு தமிழகத்தில் தடை விதித்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அதேபோல, டாஸ்மாக் மதுபானக் கடைக்கும் தடை விதிக்க வேண்டும். தமிழக பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 2016 சட்டமன்றத் தேர்தலின்போது பிரசாரம் செய்த ஜெயலலிதா, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடினார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அதே வருடம் டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். இதனால், அவரது மது ஒழிப்பு கனவு நனவாகாமலேயே போய்விட்டது. இதன் பிறகு, முதல்வரான எடப்பாடி பழனிசாமி, 2-வது கட்டமாக மேலும் 500 கடைகளை மூடுவதாக அறிவித்தார். எனினும், மதுக்கடைகள் மூடப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மதுகூட இருக்காது. பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்தார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின். அதேபோல, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்றோரும் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அந்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு விட்டது. தற்போது, மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறதோ இல்லையோ தமிழகம் முழுவதும் பரவலாக டாஸ்மாக் மதுக்கடைகள் புதிதாக திறக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், புதுக்கோட்டையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்போக, கிராம பெண்கள் ஒன்று சேர்ந்து அக்கடையை இழுத்துப் பூட்டி இருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது அரிமளம் பேரூராட்சி. இங்கு ஏற்கெனவே 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மூன்றாவதாக இன்னொரு டாஸ்மாக் கடையை திறக்க தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், புதிதாக இன்னொரு டாஸ்மாக் கடையைத் திறக்கக்கூடாது என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். குறிப்பாக, அந்த டாஸ்மாக் கடை அமையவிருக்கும் பகுதியில் வழிபாட்டுத் தலங்கள் இருப்பதோடு, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
எனினும், மக்களின் எதிர்ப்பையும் மீறி, நேற்று காலை போலீஸ் பாதுகாப்போடு 3-வது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால், அரிமளம் கிராம மக்கள் கடும் ஆவேசமும், ஆத்திரமும் அடைந்தனர். எனவே, 300 பெண்கள் உட்பட கிராம மக்கள் ஒன்று திரண்டு ஊர்வலமாகச் சென்று அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். பின்னர், டாஸ்மாக் கடையின் ஷட்டரை இழுத்து மூடியதோடு, புதுக்கோட்டை – அறந்தாங்கி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், 3 டாஸ்மாக் கடைகளையும் நிரந்தரமாக மூடுவதாக உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தற்போது 3-வுத கடையை நிரந்தரமாக மூடுவதாகவும், மற்ற 2 டாஸ்மாக் கடைகளையும் 3 மாதங்களுக்குள் படிப்படியாக மூடுவதாகவும் உறுதியளித்தனர். இதன் பிறகே போராட்டம் கைவிடப்பட்டது.
இதையறி்ந்த தமிழக மக்கள், இதேபோல இதர ஊர்மக்களும் ஒன்று திரண்டு போராடினால் மட்டுமே டாஸ்மாக் கடைகளை ஒழிக்க முடியும். அப்போதுதான், நமது குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், துணிச்சலாக டாஸ்மாக் கடையை இழுத்து பூட்டுப்போட்ட சிங்கப்பெண்களுக்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.