பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய அளவில் ஊழல் குறைந்திருக்கிறது என்று பா.ம.க. புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் சீரமைக்கப்பட்ட பா.ம.க. அரசியல் பயிலரங்கம் திறப்புவிழா நடந்தது. இப்பயிலரங்கத்தை திறந்து வைத்த அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் போதை பழக்கமும், ஆன்லைன் சூதாட்டமும் இளம் தலைமுறையை சீரழித்து வருகிறது. ஆகவே, போதைப் பொருள் விற்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் 3 மாதத்தில் 50-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கும் வகையில், அரசு தனியாக சட்டம் இயற்றி தடை விதிக்க வேண்டும்.
அதேபோல, தி.மு.க. அரசு வெற்றி பெறுவதற்கு முன்பு, கொள்கை ரீதியாக பூரண மதுவிலக்கை ஏற்றுக் கொண்டனர். அதன்படி, அடுத்த 4 ஆண்டுகளில் மதுவை ஒழிக்கும் செயல் திட்டத்தை முன்வைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு அடித்தளமே மதுதான். எனவே, படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவர வேண்டும். ஜாதியில் நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், ஜாதியை வைத்து அடக்குமுறை செய்வதுதான் தவறு. மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, நாட்டில் ஊழல் குறைந்திருக்கிறது. இதை நாம் எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அந்தளவுக்கு நாட்டில் நிறைய நிர்வாக சீர்திருத்தங்கள் செய்திருக்கிறார்கள்.
அதேபோல, இந்தியாவில் தேசிய மொழி எதுவும் கிடையாது. மாநில மொழியும் கிடையாது. அலுவல் மொழிகள்தான் 22 இருக்கின்றன. ஹிந்தியும், தமிழும் அலுவல் மொழிகள்தான். தவிர, ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கிறது. எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. பா.ம.க. இந்தியாவிலேயே வித்தியாசமான கட்சி. ஆனாலும், தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியவில்லை. இந்த நிலை நிச்சயமாக மாறும். அடுத்த 4 ஆண்டுகளுக்கு நாம் கடுமையாக உழைத்தால், 2026-ல் பா.ம.க. ஆட்சியை பிடித்து விடும். தேர்தல் நேரத்தில் 500 ரூபாய் கொடுத்தால் எல்லாவற்றையும் மக்கள் மறந்து விடுகிறார்கள். இவற்றை எல்லாம் மாற்றி புதிய அரசியலையும், புதிய செயல் திட்டத்தையும் கொண்டு வரும் நோக்கத்தில் அறிமுகமாகி இருப்பதுதான் பா.ம.க.வின் புதிய 2.0 திட்டம். 2016-ல் பா.ம.க. வெளியிட்ட வரைவு தேர்தல் அறிக்கையைக்கூட, 2 அரசியல் கட்சியினர் காப்பியடித்து விட்டனர். இதனால், 2.0 திட்டம் குறித்து வெளியே சொல்லமாட்டோம்” என்றார்.