தமிழக இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் உழைப்பதற்கு தயாராகுங்கள். வேலை தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா குட்டு வைத்திருக்கிறார்.
தமிழகத்தில் மது விற்பனைதான் உச்சத்தில் இருக்கிறது. மூளைக்கு மூளை டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால், தமிழக இளைஞர்கள் நாள் முழுவதும் டாஸ்மாக் கடைகளிலேயே குடியாகக் கிடக்கின்றனர். இதன் காரணமாக, தொழில் நிறுவனங்களில் வேலைக்கு ஆள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடித்தது. எனவே. தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள், வட மாநிலங்களில் இருந்து இளைஞர்களை அழைத்து வந்து வேலைக்கு அமர்த்தினர். மேலும், தமிழகத்தில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்கள், இங்கு வேலை கொட்டிக் கிடப்பதையும், தமிழக இளைஞர்கள் குடித்துவிட்டு போதையில் திளைப்பதையும் பார்த்துவிட்டு, தங்களது உறவினர்களையும் வேலைக்கு அழைத்து வந்தனர், வந்து கொண்டும் இருக்கின்றனர்.
இதனால், தற்போது தமிழகத்தில் ஹோட்டல் தொழில் முதல் கட்டுமானம் வரை வட மாநில தொழிலாளர்கள்தான் நிரம்பி வழிகின்றனர். இவர்களுக்கு 3 வேலை சாப்பாடு என்பதால், குறைந்த சம்பளத்துக்கு வேலை வாங்கி வருகின்றனர் தொழில் நிறுவன முதலாளிகள். ஆனால், வேலை கிடைத்தால் போதும் என்று வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால், தமிழக இளைஞர்களோ அதிக சம்பளம் எதிர்பார்க்கின்றனர். அது கிடைக்கவில்லை என்பதால் வேலை கிடைக்கவில்லை என்று சொல்லி விட்டு, டாஸ்மாக் கடைகளில் குடித்துவிட்டு வீணாக ஊர் சுற்றி வருகின்றனர். அதேசமயம் வட மாநில தொழிலாளர்களால் தங்களது வேலை பறிபோய் விட்டதாக, அப்பட்டமாக பொய் கூறி, அவர்களை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
சமீபத்தில், திருப்பூரில் டீக்குடிக்க வந்த வட மாநில தொழிலாளர் ஒருவரிடம், போதையில் இருந்த தமிழக இளைஞர்கள் சிகரெட் புகையை ஊதி வம்பிழுத்தனர். பதிலுக்கு, அந்த வட தொழிலாளர் தன்னுடன் பணிபுரியும் இதர தொழிலாளர்களை அழைத்து வந்ததும், அவர்கள் தமிழக இளைஞர்களை ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம் அரங்கேறியதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, வேலைக்காக ரயிலில் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கும் வட மாநில தொழிலாளர்களை, தமிழக இளைஞர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கடுமையாகத் தாக்கிய சம்பவமும் அரங்கேறியது.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கும் ரயில்வே போலீஸார், அந்த நபர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி குடித்துவிட்டு வெட்டியாக சுத்துவதோடு, தங்களது வறுமைக்காக தமிழகத்துக்கு வந்து வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களை, தாக்குவது போன்ற அத்துமீறல்களில் தமிழக இளைஞர்கள் ஈடுபடுவது, பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக, திரைப்பட இயக்குனரும், இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா போதைக்கு அடிமையாகாமல் உழைப்பதற்கு தயாராகுங்கள் என்று தமிழக இளைஞர்களுக்கு குட்டு வைத்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விக்கிரமராஜா, “தமிழ்நாட்டில் வேலை இல்லை என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளாமல், வேலை வாய்ப்புகளை தேட தமிழக இளைஞர்கள் முன்வர வேண்டும். வேலை தருவதற்கு வணிகர்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம். இங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி மாதம் 18,000 கோடி ரூபாய் வருவாயை, தங்களது மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். இதனால்தான், இங்கு வணிகம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் உழைப்பதற்கு தயாராகுங்கள்” என்று அறிவுரை கூறிவதுபோல நறுக்கென்று ஒரு குட்டு வைத்திருக்கிறார்.