அடுத்தவர் நிலத்தை அபகரித்து கட்சி அலுவலகம்… மீண்டும் ஆட்டையை ஆரம்பித்த தி.மு.க.: மக்கள் கிலி!

அடுத்தவர் நிலத்தை அபகரித்து கட்சி அலுவலகம்… மீண்டும் ஆட்டையை ஆரம்பித்த தி.மு.க.: மக்கள் கிலி!

Share it if you like it

அடுத்தவர் நிலத்தை அபகரிக்கும் படலத்தை தி.மு.க.வினர் மீண்டும் தொடங்கிவிட்டார்கள். தஞ்சாவூரில் கட்சி அலுவலகம் கட்ட அடுத்தவர் நிலத்தை ஆட்டைய போட்ட விவாகரம் வெளிச்சத்துக்கு வந்து சந்தி சிரிக்கிறது.

தி.மு.க.வின் 2006 – 10 வரையிலான ஆட்சியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. சர்வ சாதாரணமாக அடுத்தவர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, அழிச்சாட்டியம் செய்தனர். பராமரிப்பின்றி சில மாதங்கள் கிடந்தால் போதும், அந்த இடத்தில் கொட்டகை போட்டு சொந்தம் கொண்டாடி விடுவார்கள். வெளிநாடுகளில் இருப்பவர்கள் நிலம் என்றால் கேட்கவே வேண்டாம். பத்திரம் வரை போட்டு விடுவார்கள். இதனால், தமிழக மக்கள் பயங்கர அச்சத்தில் இருந்தனர். தங்களது இடம் சும்மா கிடந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தனர். இதன் பிறகு, கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி நடந்ததால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தனர்.

இந்த நிலையில், தற்போது தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. எனவே, மீண்டும் தங்களது நில அபகரிப்பை தொடங்கி இருக்கிறார்கள். தஞ்சாவூரில் அடுத்தவர் நிலத்தை அபகரித்து கட்சி அலுவலகம் கட்டவே, விவகாரம் கோர்ட் வரை சென்றிருக்கிறது. அதாவது, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கு, கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் செங்கல்லை எடுத்துக் கொடுத்து தொடங்கி வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதைத் தொடர்ந்து, கட்சி அலுவலகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில்தான், தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கு தனக்குச் சொந்தமான சுமார் 1,000 சதுர அடி இடத்தை தி.மு.க. மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் அபகரித்து விட்டதாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த விவகாரம் மாவட்ட தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து செல்வம் கூறுகையில், “எனது சொந்த ஊர் வலங்கைமான். கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு அருகில் எனக்குச் சொந்தமாக 6,523 சதுர அடி இடம் இருக்கிறது. எனது இடத்துக்கு வடபுறத்தில் தி.மு.க. அலுவலகம் கட்டப்படுகிறது. இதற்காக, எனது இடத்தின் பின் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரெடிமேடு சுற்றுச்சுவரை சேதப்படுத்தி, 1,000 சதுர அடி இடத்துக்கு முன்னால் தள்ளிச் சுவரை அமைத்திருக்கிறார்கள். இதுகுறித்து கல்யாணசுந்தரத்திடம் கேட்டதற்கு, உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள் என்றார்.

இதையடுத்து, நான் ஆன்லைன் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், காவல்துறையினர் விசாரணை எதுவும் செய்யவில்லை. எனவே, கும்பகோணம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். எனது மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் 2-ம் தேதி வரை அந்த இடத்தில் யாரும் நுழையக் கூடாது என்று தடை விதித்திருக்கிறது. மேலும், இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், கல்யாணசுந்தரம் இருவரும் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பி இருக்கிறது. ஆனாலும், கோர்ட் உத்தரவையும மீறி எனது இடத்தையும் சேர்த்து தி.மு.க. அலுவலகம் கட்டும் பணியைத் தொடங்கியிருக்கின்றனர். இதற்காக நான் அமைத்திருந்த சுற்றுச்சுவரையும் சேதப்படுத்தி இருக்கின்றனர்.

இதையறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற நான், அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டேன். அதற்கு, ‘நீ வந்தால் மாவட்டச் செயலாளர் உன்னை அடித்து விரட்டச் சொல்லியிருக்கிறார். ஓடிவிடு’ என்று மிரட்டினார்கள். இது தொடர்பாகவும் நான் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். தி.மு.க அலுவலகம் கட்டுவதற்காக என்னுடைய இடம் மட்டுமல்லாமல், அரசு இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் இதில் தலையிட்டு என்னுடைய இடம் எனக்குக் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்றார்.

தி.மு.க.வின் ஆட்டம் மீண்டும் ஆரம்பித்துவிட்டது. ஆகவே, நிலம் வைத்திருப்பவர்களே உஷாரய்யா உஷாரு…

தி.மு.க-வினர் சேதப்படுத்தியதாகக் கூறப்படும்  சுற்றுச்சுவர்


Share it if you like it