புதுமண தம்பதி ஆணவக்கொலை: போராளிகள் ‘கப்சிப்’!

புதுமண தம்பதி ஆணவக்கொலை: போராளிகள் ‘கப்சிப்’!

Share it if you like it

தஞ்சாவூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் துளுக்கவெளியைச் சேர்ந்தவர்கள் சேகர் – தேன்மொழி தம்பதி. பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள். இத்தம்பதிக்கு சக்திவேல், சதீஷ், சரவணன் என 3 மகன்களும், சரண்யா என்கிற மகளும் உண்டு. சேகரும், மூத்த மகன் சக்திவேலும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். சதீஷும், சரவணனும் திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 3 பேருக்குமே திருமணமாகி விட்ட நிலையில், கடைக்குட்டியான சரண்யா, நர்ஸிங் படித்து விட்டு சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்திருக்கிறார்.

இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சரண்யாவின் தாய் தேன்மொழி மனநலக் கோளாறால் பாதிக்கப்படவே, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூர் சின்னத்தெருவைச் சேர்ந்த, ஸ்ரீபெரும்புதூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மோகன் என்பவரின் தாயாரும், மனநல கோளாறு காரணமாக அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இவர்கள் செங்குந்த முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த சமயத்தில் சரண்யாவுக்கும் மோகனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது.

ஆனால், இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், தனது மைத்துனர் ரஞ்சித்தை சரண்யாவுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருக்கிறார் சக்திவேல். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சரண்யா, சென்னைக்கு புறப்பட்டுச் சென்று கடந்த 5 நாட்களுக்கு முன்பு மோகனை திருமணம் செய்து கொண்டார். இதனால், சக்திவேலுவும், ரஞ்சித்தும் கடும் ஆத்திரமடைந்தனர். எனவே, மோகன், சரண்யா ஜோடியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி இருக்கிறார்கள். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், புதுமண தம்பதிகளை வீட்டுக்கு விருந்துக்கு வரும்படி அழைத்திருக்கிறார் சக்திவேல்.

இதை நம்பி, புதுமண தம்பதிகளும் நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு, நேற்று காலை சோழபுரம் துளுக்கவெளியில் உள்ள சரண்யா வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அப்போது, சரண்யாவின் அண்ணன் சக்திவேலும், அவரது மைத்துனர் ரஞ்சித்தும் சேர்ந்து மோகனையும், சரண்யாவையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். தப்பி ஓடிய இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள். இச்சம்பவம்தான் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, ஜாதி ஆணவக்கொலை நடக்கும்போதெல்லாம், அதை எதிர்த்து கண்டனக் குரல் எழுப்பும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட போராளிகள் யாரும் இச்சம்பவத்தை கண்டித்து குரல் எழுப்பவில்லை. ஆகவே, திருமாவளவன் உள்ளிட்ட போலி போராளிகளை சமூக வலைத்தளங்களி வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.


Share it if you like it