கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது, டாஸ்மாக்கால் இளம் விதவைகள் அதிகமாகிக் கொண்டே வருவதாகக் கூறிய கனிமொழி, இப்போது எங்கே சென்றார் என்று அதிரடியாகக் கேள்வி எழுப்பி இருக்கும் மூத்த பத்திரிகையாளர் மணி, திராவிட மாடல் அரசையும் கிழி கிழியென கிழித்து தொங்க விட்டிருக்கிறார்.
இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மணி, “ஒட்டுமொத்த தமிழகத்தையும் குடிகார மாநிலமாக்கும் வகையில், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பேசுகிறார். இதை எதிர்த்து கேள்வி கேட்ட ஒரு நாதியும் இல்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது டாஸ்மாக்கால் இளம் விதவைகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறார்கள் என்று பொங்கி எழுந்தாரே தி.மு.க. எம்.பி. கனிமொழி, தற்போது எங்கே சென்றார். இதே அ.தி.மு.க. ஆட்சியாக இருந்து, அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பேசியிருந்தால் பொங்கி எழுந்திருக்க மாட்டீர்களா?
2016-ல் மதுவிலக்கை அறிவித்த கட்சி தி.மு.க. இன்றைக்கு இந்த நிலைமைக்கு ஆளானது ஏன்? 108 ஆம்புலன்ஸ் சேவை போல மதுவையும் 24 மணி நேர சேவையாக்குங்களேன். திராவிட மாடல் அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே. மது விற்பனை மூலம் அரசாங்கத்தின் வருவாயை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் முத்துசாமி அப்பட்டமாக பொய் சொல்கிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது இந்த அக்கிரமம் நடக்குமா? இந்தியாவிலேயே அதிகளவில் டூப்ளிகேட் சரக்கு விற்கும் மாநிலம் தமிழகம்தான்.
இதை கூட்டணிக் கட்சிகளும் எதிர்த்து கேள்வி எழுப்பாதது மிகவும் வேதனை. மேலும், இந்த பாவப் பணத்தில்தான் மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை கொடுக்க வேண்டும் என்றால், அப்படியொரு பணம் மக்களுக்குத் தேவையே இல்லை” என்று திராவிட மாடல் தி.மு.க. அரசை கிழி கிழி என கிழித்து தொங்க விட்டிருக்கிறார் மணி.