பெண் கவர்னர் என்பதால் அவமரியாதை: தெலங்கானா அரசு மீது தமிழிசை வருத்தம்!

பெண் கவர்னர் என்பதால் அவமரியாதை: தெலங்கானா அரசு மீது தமிழிசை வருத்தம்!

Share it if you like it

தன்னை பெண் என்றும் பாராமல் தெலங்கானா அரசு அவமானப்படுத்தியதாக, அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில கவர்னராக பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், “நான் தெலங்கானா மாநில கவர்னராக பதவியேற்கும்போது, முழு மனதுடன் மக்களுக்கு பணியாற்ற விரும்பினேன். ஆனால், அது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. மாநிலத்தின் உயர்ந்த அலுவலகத்தில் இருந்தும் பல தடைகளை சந்திக்க வேண்டி இருந்தது. எனது நடவடிக்கைகளில் எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது. நான் சர்ச்சைக்குரிய நபரும் அல்ல. நான் ஆக்கப்பூர்வமான மனிதர். சிறந்த நட்புணர்வு அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும்.

திருவனந்தபுரத்தில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். ஆனால், சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை. இக்கூட்டத்தில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலம் சார்ந்த 75 சதவீத பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாராக இருந்தார். அப்படி இருக்க, கூட்டத்தில் கலந்து கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்களது கடமையை மறந்து விடுகின்றனர். அந்த வகையில், இக்கூட்டத்தில் சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளாதது தவறு.

தவிர, குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றவும், மாநில மக்களுக்கு உரையாற்றவும் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கோள்காட்டி கவர்னர் மாளிகையிலேயே தேசியக்கொடி ஏற்றும்படி தெரிவித்தனர். அனைத்து மாநிலங்களிலும் குடியரசு தின அணிவகுப்பு நடந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது ஆச்சர்யமாக இருக்கிறது. மக்களுக்கு உரையாற்றுவது தொடர்பாக அதிகாரிகளை அணுகியபோது எந்த பதிலும் இல்லை. இதனால், நானே உரை தயாரித்து அதனை பேசினேன். பேசுவதற்கு உரை தராவிட்டால் நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும். பேச எனக்கு உரிமை இல்லையா? அவர்கள் பேசுவதை மட்டும்தான் நான் பேச வேண்டுமா?

முதல்வர், அக்கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகைக்கு வருவதில் என்ன தடை உள்ளது. கவர்னர் மாளிகை என்ன தீண்டத்தகாத இடமா? அரசியல்வாதியாக இருந்தபோது சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். தற்போது கவர்னர் பதவி வகிக்கும் போதும் விமர்சிக்கப்படுகிறேன். நான் வலிமையான நபர். மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்கிற எனது உறுதியை யாராலும் தடுக்க முடியாது. தெலங்கானா மாநில அரசால், கவர்னர் மாளிகை பலமுறை அவமானப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு பெண் கவர்னர் எப்படி நடத்தப்பட்டார் என்பது மாநில வரலாற்றில் எழுதப்படும். கவர்னருக்கு எந்த எல்லையும் கிடையாது. ஆகவே, மக்களுக்கு பணியாற்றுவதே எனது நோக்கம்” என்றார்.


Share it if you like it