தெலங்கானாவில் சீனியர் மாணவர் முகமது அலி சயீஃப் என்பவரால் ராக்கிங் செய்யப்பட்டு, மயக்க ஊசி செலுத்தி தற்கொலைக்கு முயன்ற மருத்துவ மாணவி ப்ரீத்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ராகிங் கொடுமைக்காக கைது செய்யப்பட்ட சயீஃப், கொலைக் குற்றவாளியாக மாறியிருக்கிறார்.
தெலங்கானா மாநிலம் ஜனகாமா மாவட்டம் கொடகண்ட்லா அருகேயுள்ள மொண்ட்ராய் கிர்னிதாண்டாவைச் சேர்ந்தவர் தராவத் நரேந்திரா. ரயில்வே பாதுகாப்புப் படை ஏ.எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வரும் இவர், தனது குடும்பத்துடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இவருக்கு 3 மகள்கள். இளைய மகள் ப்ரீத்தி எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, கடந்தாண்டு காகடியா மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் முதுநிலை படிப்பில் சேர்ந்தார். சிறிது நாட்களிலேயே சீனியர் மாணவரான முகமது அலி சயீஃப் என்பவர், ப்ரீத்தியை ராக்கிங் செய்து வந்திருக்கிறார். மருத்துவக் கல்லூரியில் இது சகஜம்தானே என்பதால், ப்ரீத்தியும் அமைதி காத்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது பிராக்டிக்கல் வகுப்புகள் நடந்து வருவதால், எம்.ஜி.எம். மருத்துவமனையின் அவசர அறுவை சிகிச்சை அரங்கில் தினமும் மாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை ஒரு உதவி பேராசிரியர், ஒரு எஸ்.ஆர்., ஒரு மூத்த பி.ஜி. மற்றும் 2 ஜூனியர் பி.ஜி. மாணவர்கள் பணியில் இருப்பார்கள். இந்த வகுப்பில், சயீஃப்பும், ப்ரீத்தியும் ஒரே பேட்ஜில் இருந்திருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முகமது அலி சயீஃப், தொடர்ந்து ப்ரீத்தியை ராக்கிங் செய்து வந்திருக்கிறார். இதுகுறித்து ப்ரீத்தி தனது தந்தை நரேந்திராவிடம் கூறியிருக்கிறார். கல்லூரிக்கு வந்த அவர், முதல்வரிடம் புகார் செய்வதாகக் கூறியிருக்கிறார். அதற்கு இப்போது வேண்டாம், இனிமேல் நடந்துகொண்டால் சொல்லிக் கொள்ளலாம் என்று கூறி ப்ரீத்தி தடுத்துவிட்டார்.
எனினும், இதன் பிறகும் சயீஃபின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்திருக்கிறது. இதையடுத்து, கடந்த 20-ம் தேதி கல்லூரி முதல்வர் மோகன்தாஸ், மயக்க மருந்துத்துறை தலைவர் நாகார்ஜூனா ஆகியோரிடம் சயீஃப் குறித்து புகார் தெரிவித்திருக்கிறார் ப்ரீத்தி. தொடர்ந்து, கடந்த 21-ம் தேதி மாலை சயீஃப் மற்றும் ப்ரீத்தி ஆகிய இருவரையும் அழைத்த மோகன்தாஸ் மற்றும் நாகார்ஜூனா ஆகியோர் அறிவுரை கூறி அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது சயீஃப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, என் மீதே புகார் செய்கிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார் என்று மிரட்டி இருக்கிறார். இதனால் மனமுடைந்த ப்ரீத்தி, அடுத்த சில மணி நேரங்களிலேயே தனக்குத்தானே மயக்க ஊசி செலுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
இதன் காரணமாக, கடந்த 22-ம் தேதி அவசரகால ஆபரேஷன் தியேட்டரில் பணி செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்திருக்கிறார் ப்ரீத்தி. உடனடியாக அவரை மீட்ட சக மாணவர்கள், அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து ப்ரீத்தியின் தந்தை நரேந்திரா, ஐதராபாத் போலீஸில் புகார் அளித்தார். இதன் பேரில், சயீஃப் மீது எஸ்.சி., எஸ்.டி. அட்ராசிட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சயீஃப்பை கைது செய்த போலீஸார், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில்தான், அளவுக்கு அதிகமாக மயக்க ஊசி செலுத்தியதால் உடல் உறுப்புகள் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி இருந்ததால், சிகிச்சை பலனின்றி நேற்று உயரிழந்தார். இதையடுத்து, போலீஸார் சயீஃப் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தோடு, கொலை வழக்கும் பதிவு செய்திருக்கிறார்கள். ராக்கிங் கலாசாரம் வழக்கொழிந்து விட்டதாக கருதப்பட்டாலும், இன்னும் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால், ஒரு மருத்துவரின் உயிர் பறிபோயிருப்பது வேதனையாக இருக்கிறது. ஆகவே, சயீஃப் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை இதர மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.