தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ரேஷன் கடையில் பிரதமர் மோடி போட்டோ இல்லாதது கண்டு கலெக்டருக்கு செம டோஸ் விட்டார்.
தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதன் ஒரு பகுதியாக, ரேஷன் கடைகளில் ஆய்வும் செய்தார். அந்த வகையில், ஜகீராபாத் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட காமரெட்டி மாவட்டம் பன்ஸ்வாடா நகருக்கு அருகே பிர்கூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ரேஷன் கடை ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அமைச்சருடன் வந்திருந்த மாவட்ட கலெக்டர் ஜித்தேஷ் பாட்டீலிடம், ரேஷன் கடையில் இருந்த பேனரில் பிரதமர் மோடியின் போட்டோ இல்லாதது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் கலெக்டர் திணறினார். தொடர்ந்து, கலெக்டரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிர்மலா சீதாராமன், ரேஷன் அரிசிக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் எவ்வளவு என்றார். இதற்கும் கலெக்டரிடம் பதில் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர், கலெக்டரை லெஃப்ட் அண்டு ரைட் வாங்கினார். மேலும், இன்னும் அரைமணி நேரத்தில் சரியான பதிலை தெரிந்து கொண்டு சொல்ல வேண்டும் என்று கூறியதோடு, கலெக்டருக்கு அட்வைஸும் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர், “ரேஷன் கடைகளில் வழங்கும் அரசி, கோதுமை போன்றவற்றுக்கான நிதியில் பெரும் பங்கு மத்திய அரசுதான் வழங்குகிறது. வெளிச் சந்தையில் 35 ரூபாய்க்கு கிடைக்கும் அரிசி, ரேஷன் கடைகளில் 1 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு 28 ரூபாய் பங்களிப்பு வழங்குகிறது. ஆனால், மாநில அரசு வெறும் 6 ரூபாய்தான் வழங்குகிறது. பயனாளர்களிடம் 1 ரூபாய் மட்டும்தான் வசூலிக்கப்படுகிறது. மேலும், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு 2020-ம் ஆண்டு முதல் இலவச அரசி, கோதுமையை மத்திய அரசே முற்றிலும் இலவசமாக வழங்கி வருகிறது” என்று விளக்கம் அளித்தார்.
அமைச்சரின் பிரதமர் மோடி படம் குறித்த பேச்சு, எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.