கோயில் நிலம் கோயிலுக்குச் சொந்தமானதுதானே தவிர, அறநிலையத்துறையின் சொத்துக்களாக கருதக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள ஹிந்து கோயில்கள் அனைத்தும், கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியின்போது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதன் பிறகு, ஆட்சியாளர்கள் கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். சுவாமி சிலைகள் முதல் உண்டியல் பணம் வரை அரசியல்வாதிகளால் சூறையாடப்பட்டு வருகின்றன. அதுமட்டுமா, கோயில் நிலங்களை குத்தகை என்கிற பெயரில் தனியாருக்கு தாரைவார்த்து கோடி கோடியாக கொள்ளையடித்து வருகின்றனர். தற்போது, கோயில் நிலங்களை விற்கலாம் என்று புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் என்பது பல்வேறு பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டவை. ஆகவே, அச்சொத்துக்கள் அனைத்தும் கோயில் சொத்துக்களாக இருக்க வேண்டுமே தவிர, அறநிலையத் துறைக்குச் சொந்தமான சொத்துக்களாகக் கருதக்கூடாது. ஆனால் அறநிலையத் துறையோ, அச்சொத்துக்களை தங்களது சொத்துக்களாகக் கருதுகிறது. இதனால், அறங்காவலர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தங்களது இஷ்டதுக்கு கோயில் சொத்துக்களின் உரிமையை மாற்றுகின்றனர். அவ்வாறு செய்யக் கூடாது. எனவே, கோயில் சொத்துக்களை அறநிலையத் துறை உரிமை கோருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், கோயில் சொத்தில் மாற்றம் மேற்கொள்ள, அறநிலையத் துறை கமிஷனருக்கு அதிகாரம் இருக்கும் நிலையில், அச்சொத்தை, அறநிலையத் துறையின் சொத்தாக கருதக் கூடாது; அது கோயில் சொத்துதான். சொத்து மாற்றத்தை அறநிலையத் துறை சட்டப்படியே மேற்கொள்ள முடியும் என்று உத்தரவிட்டனர். மேலும், அறநிலையத் துறை சட்டத்தில் கோயில் மற்றும் மத அறக்கட்டளைகள் தொடர்பாக, கமிஷனருக்கு உள்ள அதிகாரம் மற்றும் கடமைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. எனினும், கோயிலுக்கு அவசியமானதாக, பயனுள்ளதாக இருந்தால் ஒழிய, கமிஷனரின் ஒப்புதலின்றி, கோயில் மற்றும் மத நிறுவனங்களின் சொத்துக்களை குத்தகைக்கோ, வாடகைக்கோ விட முடியாது என்று கூறியிருக்கிறார்கள்.