கோயில் சொத்து வாடகை பாக்கி ரூ.2,390 கோடி! ஐகோர்ட் கண்டனம்

கோயில் சொத்து வாடகை பாக்கி ரூ.2,390 கோடி! ஐகோர்ட் கண்டனம்

Share it if you like it

கோயில் சொத்துக்களின் வாடகை பாக்கி 2,390 கோடி ரூபாயை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஏராளமான கோயில் சொத்துக்கள் பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, தனி நபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கும் கோயில் சொத்துக்கள் மூலம் வர வேண்டிய வாடகை பாக்கி சுமார் 2,500 கோடி ரூபாய். மேற்கண்ட வாடகை பாக்கியை வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமும், வாடகை பாக்கியை வசூலிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால், அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

இதையடுத்து, கோர்ட் உத்தரவிட்டும் வாடகை பாக்கியை வசூலிக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, கோர்ட் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார் வெங்கட்ராமன் என்பவர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (பிப்.11-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது, 2021 அக்டோபர் மாதம் வரை 2,390 கோடி ரூபாய் வாடகை பாக்கி இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வக்கீல், வாடகை பாக்கியை வசூலிப்பது தொடர்பாக அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் நடந்திருக்கிறது என்று தெரிவித்தார். அதற்கு நீதிபதிகளோ, நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கை எங்கே? என்று கேள்வி எழுப்பியதோடு, 2,390 கோடி ரூபாயில் மூன்றில் ஒரு பங்கு வசூலித்திருந்தால்கூட 1,000 கோயில்களை சீரமைக்க முடியும் என்று கடிந்து கொண்டனர். பின்னர், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரான அறநிலையத் துறை கமிஷனர், ‘ஆண்டுக்கு 540 கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தினசரி 2 முதல் 3 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. வாடகை பாக்கி அனைத்தும் விரைவில் வசூலிக்கப்படும். சொத்துக்கள், வாடகைதாரர்கள், வாடகை செலுத்தாதவர்களின் பட்டியலை விரைவில் இணையதளத்தில் வெளியிடுவோம்’ என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, விசாரணையை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.


Share it if you like it