ரூ.2,000 கோடி கோயில் நிலங்கள் மீட்பு!

ரூ.2,000 கோடி கோயில் நிலங்கள் மீட்பு!

Share it if you like it

இதுவரை 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. இக்கோயில்களின் பராமரிப்பு செலவு, பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கான செலவுகள் என பல்வேறு தேவைகளை சமாளிப்பதற்காக, மன்னர்களும், நிலச்சுவான்தார்களும் ஏராளமான சொத்துக்களை கோயில்களுக்கு தானமாக எழுதி வைத்திருக்கிறார்கள். இந்த நிலங்கள், காலப்போக்கில் பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது.

இப்படி ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சொத்துகளை மீட்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், கோயில் சொத்துக்களை மீட்கக் கோரி கோர்ட்டிலும் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஆக்கிரமிப்பிலுள்ள கோயில் சொத்துக்களை மீட்பதற்கான நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டிருக்கிறது.

அதேபோல, கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களும் தனி நபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கின்றன. மேலும், நிலங்களில் கடைகள் கட்டியும் வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. இப்படி வாடகைக்கு விடப்பட்டிருக்கும் கோயில் சொத்துக்கள் மூலம் வர வேண்டிய வாடகை பாக்கியும் சுமார் 3,000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கிறது. கோர்ட் உத்தரவுப்படி மேற்கண்ட வாடகை பாக்கியை வசூலிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில்தான், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அறநிலையத்துறை தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஆக்கிரமிப்பு செய்வர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல, ஆக்கிரமிப்பில் இருக்கும் அனைத்து கோயில்களின் நிலங்களும் மீட்கப்படும். தவிர, கோயிலுக்குச் சொந்தமான இடங்களை அளவீடு செய்யும் பணிகளும் நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it