கைது செய்யப்பட்ட தென்காசி மதபோதகர், சர்ச்சுக்குள் அதிநவீன கேமரா பொறுத்தி, பெண்களை வீடியோ பதிவு செய்து, போட்டோக்களை மார்பிங் செய்து, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டான்லி குமார். 49 வயதாகும் இவர், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள மகிழ்வண்ணநாதபுரம் கிராமத்தில் இருக்கும் பி.சி.ஐ. எனப்படும் பெந்தேகோஸ்தே ஜெபவீடு என்கிற பெயரிலான கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மதபோதகராக பணியாற்றி வந்தார். இவர் மீது பாலியல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, இவரை போலீஸார் நேற்று கைது செய்திருக்கிறார்கள். இந்த சூழலில்தான், மதபோதகர் ஸ்டான்லி குமார், சர்ச்சுக்குள் அதிநவீன கேமரா வைத்து, சர்ச்சுக்கு வரும் பெண்களை வீடியோ பதிவு செய்து, பின்னர் அவர்களது போட்டோகளை ஆபாசமாக மார்பிங் செய்து, இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பாலியல் டார்ச்சர் செய்ததாக புகார் எழுந்திருக்கிறது.
இதுகுறித்து ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் அளித்திருக்கும் புகார் மனுவில், “மதபோதகர் ஸ்டான்லி குமார் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு பாலியல் உறவுக்கு அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். எனது 30 வயது மகளுக்கு வயிற்றுவலி என்று சர்ச்சுக்கு அழைத்துச் சென்றேன். அப்போது அவளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முயன்றார். இதுகுறித்து வெளியே சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதால் விட்டுவிட்டோம். இதன் பிறகு, மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு தகாத உறவுக்கு அழைத்திருக்கிறார். இதுகுறித்து அப்பெண் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறா.
மேலும், ஸ்டான்லி குமார் சர்ச்சுக்கு வரும் பல பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார் என்கிற விபரம் எங்களுக்குத் தெரியவந்தது. சர்ச்சுக்குள் அதிநவீன சுழலும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளுடன் கூடிய கேமராக்களை பொருத்தி இருக்கிறார். இதன் மூலம், சர்ச்சுக்கு வருபவர்களை வீடியோ பதிவு செய்கிறார். குறிப்பாக, பெண்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து வைத்துக்கொண்டு, இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி தகாத உறவுக்கு அழைக்கிறார். எனவே, மதபோதகர் ஸ்டான்லி குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது, கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோவைப் போல, மதபோதகர் ஸ்டான்லி குமாரிடம் ஏராளமான வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுகிறது. ஆகவே, இவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று சபை மக்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.