தஞ்சாவூர் அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரமடைந்த தி.மு.க. கவுன்சிலர், காதலன் வீட்டை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கொத்துக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. தி.மு.க.வைச் சேர்ந்த இவர், ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது மகள் கனிமொழி, மேலையூரில் வசிக்கும் உறவினரான செல்வக்குமார் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். இக்காதலுக்கு கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்திருக்கிறார்கள். எனினும், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி, செல்வக்குமாரைத் திருமணம் செய்து கொண்டார் கனிமொழி. இதனால் ஆத்திரமடைந்த கருணாநிதி, உறவினர்கள் மற்றும் தி.மு.க.வினரை அழைத்துக் கொண்டு, மேலையூருக்குச் சென்று செல்வக்குமாரின் வீட்டையும், வீட்டிலுள்ள பொருட்களையும் எல்லாம் அடித்து நொறுக்கி சூறையாடி இருக்கிறார்.
இதுகுறித்து செல்வக்குமார் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். ஆனால், ஆளும்கட்சிப் பிரமுகர் என்பதால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, செல்வக்குமார் குடும்பத்தினர் சார்ந்த பா.ம.க.வினர் கும்பகோணம் – காரைக்கால் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பிறகு, வழக்குப் பதிவு செய்ய போலீஸார், 3 பேரை கைது செய்திருப்பதாகவும், மற்றவர்களையும் விரைவில் கைது செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.