தமிழகத்தில் நெற்களஞ்சியம் என்று அறியப்படும் தஞ்சை டெல்டா பகுதிகளின் வாழ்வாதாரமாக இருப்பது காவேரி ஆறு. கர்நாடக மலையின் குடகு மலையில் பிறந்து ஆந்திர மாநிலம் வழியில் பயணித்து தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் நுழைந்து பல மாவட்டங்களை செழிப்படைய வைத்து கடலில் கலக்கும் ஒரு வற்றாத ஜீவநதி காவேரி. காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலத்தில் கபினி ஹேமாவதி கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட பல்வேறு அணைகள் கட்டப்பட்டது. ஆந்திர மாநிலத்தை கடந்து தமிழகத்தின் எல்லைக்குள் வரும் போது மேட்டூர் அணை நீர்த்தேக்கம் கட்டப்பட்டிருக்கிறது. இடையில் ஆங்காங்கே சிறிய அளவிலான தடுப்பணைகள் வனப்பகுதிகளில் ஏராளமாக இருக்கும். ஆனால் இதையெல்லாம் கடந்து ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவநதியாகவே காவேரி பாய்ந்திருக்கிறது . சமீப காலங்களில் சுற்றுச்சூழல் மாறுபாடு காரணமாக மழை பொய்ப்பு .ஆறுகளில் அதிக அளவில் மணல் அள்ளும் காரணமான நீர் பிடிப்பு குறைவு. ஆறுகள் நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பு . காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் நீர் வரத்து குறைவதோடு நீர் வளமும் குறைபட்டு தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கியது.
சில வருடங்களில் பெய்யும் பெரும் மழை வெள்ளம் காரணமாக கர்நாடக மாநிலங்களின் அணைகள் நிரம்பி வழியும் போது அணையின் பாதுகாப்பு கருதி பல லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படும். அவை தமிழகம் முழுவதும் பெருவெள்ளமாக பாய்ந்து வெள்ள சேதங்களை ஏற்படுத்துவதும் கடைமடை பகுதிகளில் பயிர்கள் முழுவதுமாக மூழ்கி சேதம் அடைவதும் நடக்கும். வறட்சியான காலங்களில் போதிய அளவு நீர் இருப்பு இல்லை என்று சொல்லி கர்நாடகம் கை விரிக்கும். தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும். இந்த இரு மாநிலங்களுக்கு இடையான நதிநீர் பங்கிட்டை காங்கிரசின் பிரிவினை வாதமும் திமுகவின் தமிழ் தமிழர் அரசியலும் கூட்டணி போட்டு அரசியலாக்கியது. அதன் விளைவு கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் . தமிழகத்தில் கன்னட நடிகர்கள் தொழில் வளாகங்கள் உள்ளிட்டவை மீது தாக்குதல் என்று சமூக விரோத தேச விரோத சம்பவங்கள் கடந்த காலங்களில் சாதாரணமாக அரங்கேறியது.
தமிழ் தமிழர் என்ற அரசியல் பேசும் பிரிவினை அமைப்புகள் பலவும் கன்னட மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் எதிராக போர் கொடி தூக்கும். கன்னடத்தில் இருக்கும் பிரிவினைவாத மொழி இனம் பேசும் அமைப்புகள் தமிழக அரசுக்கும் மக்களுக்கும் எதிராக களம் இறங்கும். அந்த வகையில் காவேரி என்பது நதிநீர் பங்கீடு என்பதைக் கடந்து இரு மாநிலங்களில் அனல் தவிக்கும் அரசியல் களமாக மாறியது. பிரிவினைவாதிகள் மொழி இன அடிப்படையில் பயங்கரவாதம் கருத்தியல் வளர்ப்பவர்களுக்கெல்லாம் இந்த காவேரி நதிநீர் விவகாரமும் இதை ஒட்டி இரு மாநிலங்களில் நிகழும் சம்பவங்களும் அரசியல் பகடையானது. தமிழக முதல்வராக அதிமுக ஆட்சியில் இருந்தபோது அதன் பொதுச்செயலாளரும் முதல்வர் பதவியும் இருந்த வருமான செல்வி ஜெயலலிதா அவர்களின் பெரும் முயற்சி சட்ட பிரயத்தனம் காரணமாக காவேரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை அரசு இதழில் வெளியிடச் செய்தார் . அதன் தொடர்ச்சியாக பெரும் சட்டப் போராட்டங்கள் நடத்தி காவேரி நதிநீர் மேலாண்மை வாரியமும் அமைக்கப்பட்டது. 2014 ல் மோடி அரசு பதவியேற்ற பிறகு காவேரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதோடு இரண்டு மாநிலங்களுக்கும் இடையேயான நதிநீர் பங்கீடு இரண்டு மாநில அரசுகளையும் கடந்து இது அரசியலாக்கப்படாமல் தவிர்க்க பட்டது. மாநில மக்களின் நலன் விவசாயம் குடிநீர் ஆதாரம் உள்ளிட்ட அவற்றின் பாதுகாப்பு விஷயமாக மட்டுமே அணுக வேண்டும். இந்த விவகாரத்தை மக்களின் நலனாக மட்டுமே கையாள வேண்டும் தவிர அரசியல் பார்வையில் புகுத்த கூடாது என்று தெளிவான வரையறையோடு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்தது.
கடந்த பல ஆண்டுகளாக கர்நாடகாவில் பாஜக அரசும் பாஜகவின் கூட்டணியில் இருந்த அரசுகளும் ஆட்சியில் இருந்தது . தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி இருந்தது .அதிமுக பாஜக இடையே கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் காவிரி நதிநீர் விவகாரம் நடுவர் மன்ற தீர்ப்பு அணைகளின் நீர் இருப்பு இரண்டு மாநிலங்களில் நீர் தேவை மட்டுமே கவனத்தில் கொண்டு நதிநீர் பங்கீடு செய்யப்பட்டது. அதனால் இந்த காவிரி விவகாரம் அரசியலாகாமல் தவிர்க்கப்பட்டது . இரு மாநிலங்களிலும் பொது அமைதி சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவோ அதன் கூட்டணியோ அல்லாத காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. பெரும்பான்மை பலத்தோடு காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்த பிறகு அவர்கள் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் சொல்லியபடி மேகதாது அணை விவகாரத்தை கையில் எடுத்தார்கள். ஆனால் அதற்கு உரிய வழிகாட்டுதல்கள் விதிகள் காரணம் காட்டி மத்திய அரசு கிடப்பில் வைத்திருக்கிறது. 10 ஆண்டுகள் காங்கிரஸின் மாநில ஆட்சி அதிகாரம் கர்நாடகாவில் இல்லாத இருந்த நிலையில் காவிரி விவகாரமும் சிக்கலாக இல்லாமல் அமைதியாக நதிநீர் பங்கீடு முடிந்தது. ஆனால் மீண்டும் காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை .அணையில் நீர் இருப்பு இல்லை. காவிரி நதி எங்களுக்கே சொந்தம் என்று திரும்பிய பக்கமெல்லாம் போர் கொடித் தூக்கம் கன்னட அமைப்புக்களுக்கு முழு ஆதரவு என்று கர்நாடகாவில் காவேரி அரசியல் தமிழகத்திற்கு எதிரான பிரிவினைவாத அரசியலாக தலை தூக்குகிறது.
கர்நாடகாவின் இந்த பிரிவினை அரசியலுக்கு சற்றும் குறையாமல் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு ஒருபுறம் கூட்டணி அரசு கூட்டணி கட்சி என்ற வகையில் காங்கிரஸோடு இணக்கும் காட்டுகிறது. கர்நாடகாவில் நடைபெற்ற ஐஎன்டிஐஏ கூட்டணியிலும் சுமூகமாக பங்கேற்றது. ஆனால் அதே காங்கிரஸ் அரசோடு பேசி மேகதாது விவகாரத்தில் ஒரு சுமுக நடவடிக்கையை மேற்கொள்ள இயலவில்லை. தேர்தலுக்கு முன்பே கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மேகதாது அணையை கட்டிய தீருவோம் என்ற வாக்குறுதியை எதிர்க்கவோ அதைப் பற்றிய எந்த ஒரு பேச்சு வார்த்தையை தேசிய காங்கிரஸ் மூலமாக முன்னெடுக்கவோ இல்லை .ஆனால் அவர்களின் தேர்தலுக்கு ஆதரவாக தமிழகத்திலிருந்து திமுக விசிக உள்ளிட்ட எல்லா கட்சிகளும் பிரச்சாரத்திற்கு போய் மக்கள் ஆதரவைத் திரட்டியது . காங்கிரஸின் வெற்றி பெற்ற ஆட்சி பதவியேற்பு விழாவிலும் தமிழகத்தின் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் முன்னிலை வகித்தது. ஆனால் இன்று காவேரி விவகாரம் மீண்டும் தலை தூக்கும் போது மத்திய அரசின் மீதும் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் மீதும் பழி போட்டுவிட்டு வழக்கம் போல தனது மொழி அரசியலை இன அரசியலை செய்கிறது.
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகள் அதிமுகவும் கர்நாடகாவில் பாஜகவும் ஆட்சியில் இருந்த காலங்களில் சில ஆண்டுகள் மழை அதிகமாக பெய்ததும் உண்டு .சில ஆண்டுகள் மழை பொய்த்ததும் உண்டு . ஆனால் அனைத்தையும் கடந்து காவிரியில் உரிய காலகட்டத்தில் நதிநீர் திறந்து விடப்படுவதும் நதியின் நீர் இருப்பு பொறுத்து இரு மாநிலங்களும் பங்கிட்டு கொள்வதும் என்று எல்லாம் சமூகமாகவே நடந்தது. சொல்லி வைத்தார் போல கர்நாடகாவில் காங்கிரசும் தமிழகத்தில் திமுகவும் ஆட்சியில் அமர்ந்தவுடன் இரண்டு மாநிலங்களிலும் காவிரி நதி நீர் அரசியலாக்கப்படுகிறது. ஒட்டுமொத்த பழியும் மத்திய அரசின் மீதும் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் மேலும் முன்வைத்து விஷம கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது இங்கு தேவை காவேரி நதிநீர் அல்ல . அந்த காவேரி நீர் பங்கீட்டை வைத்து செய்யப்படும் மொழி இன பிரிவினைவாத அரசியலே இங்கு பலருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு தமிழகத்தில் எப்படி திமுக முனைமமாக இருக்கிறதோ ? அதே வகையில் தேசிய அளவில் கர்நாடகாவின் மாநில அளவில் காங்கிரஸ் செயல்படுவது வெட்ட வெளிச்சம் ஆகிறது.
அதனால் தான் கடந்த காலங்களில் அங்கு காங்கிரசும் இங்கு திமுகவும் இருந்த காலங்களில் எல்லாம் இந்த காவிரி நதிநீர் அரசியலாக்கப்பட்டிருக்கிறது .பல ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய அரசில் அங்கம் வகித்த போதும் திமுகவோ அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸோ இந்த காவிரி நதிநீர் விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வை எட்டவே இல்லை. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்த நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இல்லாத நிலையில் கூட மாநிலத்தின் நலன் தேசத்தின் நலன் என்ற வகையில் காவிரி விவகாரத்தில் ஒரு சமூகத் தீர்வை எட்ட முடிந்தது. ஆனால் மீண்டும் தமிழகத்தில் திமுகவும் கர்நாடகாவில் காங்கிரசும் வரும் போது பழையபடி இதே காவேரி அரசியலாகிறது. நதிநீர் பங்கீடு சிக்கலாகிறது. டெல்டா பகுதிகள் நீரின்றி விவசாயம் பொய்க்கிறது . மழை பொய்த்ததால் அணைகளில் நீர் இருப்பு இல்லாமல் கர்நாடக அணைகளும் வறண்டு போகிறது. அதை காரணம் காட்டி தண்ணீர் விட முடியாது என்று கர்நாடக அரசு முரண்டு பிடிக்கிறது.
கடந்த காலங்களில் இரண்டு மாநிலங்களிலும் இந்த காவிரி நதிநீர் விவகாரம் முழுமையான அரசியலாக்கப்பட்டு அதன் மூலம் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏராளம் நிகழ்ந்துவிட்டது. ஆனால் அந்த கசப்புணர்வுகளை எல்லாம் கடந்து இரு மாநில மக்களும் பல ஆண்டுகள் முழுமையான நல்லிணக்கத்தோடு சமூக அமைதியோடு வாழ்ந்தார்கள். காரணம் இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியாளர்கள் காவேரியை அரசியலாக்காமல் அதை ஒரு ஜீவ நதியாக இரண்டு மாநிலங்களையும் வாழ்விக்கும் ஒரு தாயாகவே பாவித்தார்கள். அதனால் பிரச்சனை இல்லாமல் எல்லாம் சமூகமாக போனது. ஆனால் தற்போது மீண்டும் தண்ணீர் வந்தாலும் விடுவதற்கு இல்லை. காவிரி எங்களுக்கு மட்டுமே சொந்தம் அங்கு கன்னட பிரிவினைவாத அமைப்புகள் விஷமமாக பேசுகிறது. அதை ஆளும் மாநில காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்க்கிறது. இவை யாவும் போதாது என்று தமிழகத்தில் காவிரி நீர் வேண்டி சட்ட நடவடிக்கைகளை எடுப்போம். உச்ச நீதிமன்றம் போவோம் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கர்நாடகாவில் நேற்று தமிழகத்திற்கு எதிராக ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடந்திருக்கிறது.
இதன் விளைவுகள் இரு மாநிலங்களில் இருக்கும் மக்களின் நலன் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு காரணமாகும். இரண்டு மாநிலங்களிலும் தொழில் கல்வி வியாபாரம் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் ஏராளமான மக்கள் உண்டு . அவர்களின் நலன் தேசத்தின் இறையாண்மை பிரிவினைவாதிகளின் சூழ்ச்சி அரசியல் தகர்த்து அனைவரையும் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது . அதை மத்திய அரசு உணர்ந்து உடனடியாக களமிறங்க வேண்டும். அணையின் நீர் இருப்பு இரண்டு மாநிலங்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் செயல்பட தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். மறுபுறம் இரண்டு மாநிலங்களிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறினால் அதற்கு அந்தந்த மாநில அரசுகளை முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அதன் காரணமான நடவடிக்கைகளுக்கும் இரண்டு மாநில அரசுகள் மட்டுமே மத்திய அரசால் பொறுப்பாக்கப்படும் அதை உணர்ந்து மாநிலத்தில் பொது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் மக்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்த வேண்டும் என்று கடுமையான எச்சரிக்கையை விடுக்க வேண்டும்.. இனியேனும் தர்மத்தின் வழியில் மாநில நலனையும் மக்கள் நலனையும் முன்னிறுத்தும் ஆட்சியாளர்களை இரண்டு மாநில மக்களும் தங்களின் சுயநலம் கடந்து தேர்வு செய்து இந்த காவிரி விவகாரத்திற்கு இதுபோல் பல விவகாரங்களுக்கு அரசியல் கடந்த சமூகத் தீர்வுகளை தேடிக்கொள்ள தயாராகட்டும்.