உச்ச நீதிமன்றத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ரூ.800 கோடி ஒதுக்கீடு !

உச்ச நீதிமன்றத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ரூ.800 கோடி ஒதுக்கீடு !

Share it if you like it

உச்ச நீதிமன்றத்தின் 75-வது ஆண்டு தினம் நேற்று தலைநகர் டெல்லியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றத்தை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய அரசு ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.

“தற்போதைய உச்ச நீதிமன்ற கட்டிடத்தில் நீதித் துறையினர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் உச்ச நீதிமன்ற வளாகத்தை விரிவாக்கம் செய்வதற்கு ரூ.800 கோடி நிதி ஓதுக்கீட்டுக்கு கடந்த வாரம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், உச்ச நீதிமன்றத்துக்கான புதிய இணையதளம், டிஜிட்டல் தளங்கள் உள்ளிட்டவற்றை அவர் அறிமுகப்படுத்தினார்.

உச்ச நீதிமன்றத்தின் வைர விழா நிகழ்வு நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்வில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஓய்.சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் உச்ச நீதிமன்றத்தின் பங்களிப்பு குறித்தும், நாட்டின் வளர்ச்சியில் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.

“சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் தொடர்ந்து முயற்சித்துவருகிறது. கருத்துச் சுதந்திரமாகஇருக்கட்டும், சமூக நீதியாக இருக்கட்டும் நாட்டின் சமூக, அரசியல் போக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் திருப்புமுனையாக அமைந்துள்ளன. நாட்டில் ஜனநாயகத்தை உச்ச நீதிமன்றம் வலுப்படுத்துகிறது.

தற்போது உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்குகின்றன. இந்தியாவின் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வாய்ப்புகளை நாம் திறம்பட பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் நீதித் துறையின் பங்களிப்பு முக்கியமானது. ஒவ்வொரு இந்திய குடிமக்களின் உரிமை நிலைநாட்டப்படும்போது, அது நாட்டின் வளர்ச்சியையும் மேம்படுத்தும். நீதிமன்றம் வழியாகவே இது சாத்தியமாகிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட கிரிமினல் சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் வழியாக, நம் நாட்டின் சட்ட நடைமுறைகள், கொள்கைகள், விசாரணை முறைகள் புதிய பரிணாமம் எடுத்து வருகின்றன. பழைய சட்டங்களிலிருந்து புதிய சட்டங்களை நோக்கிய நகர்வு சுமூகமானதாக இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது என்று பேசினார்.


Share it if you like it