மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு அதை எதிர்த்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை மேல் முறையீடு செய்ய அவகாசம் உண்டு. அங்கும் மரண தண்டனை உறுதியாகும் பட்சத்தில் குடியரசு தலைவரின் கருணை வேண்டி கருணை மனு செய்யும் அவகாசம் உண்டு. வழக்கின் தன்மையை பொறுத்து குடியரசு தலைவர் முடிவெடுக்க முடியும். தனிநபர் வழக்குகளில் அவர் வழக்கின் சாராம்சம் மரண தண்டனை பெற்றவரின் பிண்ணணி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைத்த வழக்குகளும் உண்டு.
தனிநபர் அல்லாத குழு செயல்பாடு அளவிலான குற்ற செயல்கள் மற்றும் பயங்கரவாத தேசவிரோத குற்றங்கள் காரணமாக மரண தண்டனை பெற்ற கைதிகளின் கருணை மனுக்கள் மீதான முடிவுகள் குடியரசு தலைவர் மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது மாநில தலைமைச் செயலகம் உள்ளிட்ட அவற்றில் கருத்து கேட்டு அதன் அடிப்படையிலும் தன் விருப்பத்தின் பெயரிலும் சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில் அவர் அந்த கருணை மனுவை ஏற்று மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கவும் அல்லது அந்த கருணை நிராகரிக்கவும் முழு உரிமை உண்டு.
இந்தக் குடியரசு தலைவரின் கருணை மனுக்கள் மீதான முடிவு இறுதி முடிவு என்ற அளவில் கடந்த காலங்களில் எத்தனையோ கருணை மனுக்கள் மீது அவர் கருணை காட்டி ஆயுள் தண்டனையாக குறைத்த வழக்குகளும் உண்டு. அவர் கருணை காட்ட மறுத்த காரணமாக மனுக்கள் நிராகரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வழக்குகளும் நடைமுறையில் உண்டு.
ஆனால் ஜனாதிபதி கருணை மனு மீதான முடிவு தாமதப்பட்ட காரணங்களால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மறு சீராய்வு என்று வழக்குகள் சென்று அரசியலாக்கப்பட்டதன் காரணமாக அரிதிலும் அரிதான சில வழக்குகளில் பெரும் சட்ட சிக்கலும் நடைமுறை குழப்பங்களும் நிகழ்ந்தது. இதில் வாக்கு வங்கி அரசியலும் புகுந்த காரணம் உச்ச நீதிமன்றத்திற்கும் கடந்த காலங்களில் மரண தண்டனை வழங்கிய சிறப்பு நீதிமன்றங்களுக்கும் தீர்ப்பு விஷயத்தில் பெரும் முரண்பாடுகளும் தோன்றியது.
குறிப்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் குடியரசு தலைவர் கருணை மனு அனுப்பப்பட்டது. அந்த கருணை மனு மீதான முடிவு தாமதமானதால் இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு போனது .இதில் ஏற்பட்ட குழப்பங்களும் அதன் காரணமான அரசியலும் ஒரு கட்டத்தில் தேசத்தின் இறையாண்மையை அசைத்துப் பார்க்கும் வகையிலான விளைவுகளை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் காரணம் குடியரசு தலைவர் கருணை மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி கிடப்பில் போட்டது தான் என்ற குற்றச்சாட்டுகள் ஒரு புறம் . குடியரசு தலைவர் கருணை மனுவை நிராகரிக்கும் பட்சத்தில் அதையே இறுதி முடிவாக ஏற்காமல் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவதும் நீதிமன்றம் அவ் வழக்குகளை விசாரணை செய்ததும் தான் இது போன்ற குழப்பங்களுக்கு காரணம் என்ற ஒரு தரப்பு . என்று இது பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. நீதித்துறையில் சட்டம் நடைமுறை என்று பல மட்டத்திலும் பலவீனங்கள் நிறைந்திருப்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியது. இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவும் இது போன்ற குழப்பங்கள் நடைமுறை சிக்கல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்கவும் மத்திய அரசின் புதிய சட்ட திருத்தம் அவசியம் ஆகிறது.
இந்த மசோதா தாக்கல் செய்து இந்த வரைவு முழுமையாக அமலுக்கு வரும் பட்சத்தில் இனி மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை வைத்து சட்ட சிக்கலை ஏற்படுத்துவதும் அவலம் மறையும். மக்களுக்கு நீதிமன்றங்கள் மீது அவநம்பிக்கையும் அதிருப்தியும் வரும் வகையிலான அரசியலை செய்வதற்கும் ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
அதே நேரத்தில் ஜனாதிபதியின் முடிவே இறுதியானது என்ற பட்சத்தில் அவர் தனது இறுதி முடிவை எடுப்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் வகுக்கப்படும். உள்துறை அமைச்சகம் அல்லது மாநில ஆளுநர் மாளிகை அல்லது மாநில தலைமைச் செயலாளர் அல்லது இந்த மூன்றும் தரும் பரிந்துரைகள் என்று இவை அனைத்தையும் மையமாக வைத்து குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட கால வரையறைக்குள் இறுதி முடிவு எடுக்க நடைமுறைகள் வரக்கூடும். அப்படிப்பட்ட நடைமுறைகள் வரும் பட்சத்தில் குற்றவாளிகள் தரப்பு அரசு தரப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு என்று எந்த துறைக்கும் பங்கம் இல்லாமல் கிடைக்க பெறும் பரிந்துரைகளின் அடிப்படையில் குடியரசு தலைவர் தீர்க்கமான முடிவை எடுக்க முடியும். அந்த முடிவு இறுதியானது என்னும் பட்சத்தில் அதன் அடிப்படையிலேயே அவருக்கு கொடுக்கப்படும் பரிந்துரைகளும் இருக்கும் என்பதால் இனி மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் காலதாமதம் அலைக்கழிப்பு நீதிமன்ற சர்ச்சைகள் என்று எதிலும் சிக்காமல் உரிய காலத்தில் உரிய பதிலை பெற முடியும்.
குடியரசு தலைவரின் முடிவே இறுதியானது என்ற பட்சத்தில் நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் தலையிட முடியாத நிலை உருவாகும்.
கடந்த காலங்களில் நொய்டா நிதாரி வழக்கு மற்றும் நிர்பயா வழக்கு உள்ளிட்ட அரிதிலும் அரிதான கொடும் கொடூர குற்றங்களிலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு மும்பை தாக்குதல் வழக்கு ராஜீவ் கொலை குற்றவாளிகள் வழக்கு என்று கடந்த காலங்களில் தேசத்தின் இறையாண்மையை அசைத்துப் பார்க்கும் வகையிலான தேச விரோத பயங்கரவாத நடவடிக்கைகள் ஈடுபட்டவர்களுக்கும் ஆதரவாக குரல் எழுப்பியவர்களுக்கு. ஆதரவான நிலை உருவானதைப் போல எதிர்காலத்தில் எந்த ஒரு வழக்கிலும் நிகழா வண்ணம் தடுக்க முடியும்.
குடியரசு தலைவரின் முடிவே இறுதியானது என்ற உறுதியான நடைமுறை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் அரசியலாக்கப்படுவதும் அதன் மூலம் இந்திய சட்டமும் நீதித்துறையும் கேலிக்கூத்தாக்கப்படும் அவலமும் முடிவுக்கு வரும்
கொடூர குற்றங்களில் ஈடுபோடுவோருக்கும் கருணை மனு மறு சீராய்வு மனு என்று ஏதேனும் ஒரு வகையில் தப்பித்து விடலாம் என்ற நம்பிக்கை தகர்ந்து கொடூர குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்ற அச்சம் வரக்கூடும். அது தேசத்தின் கொடும் சமூக குற்றங்களுக்கும் தேச விரோத பயங்கரவாத சக்திகளுக்கும் ஒரு எச்சரிக்கையை கொடுக்கும். அந்த வகையில் ஜனாதிபதியின் முடிவே இறுதியானது மேல்முறையீடு செய்ய முடியாது என்ற இந்த புதிய குற்றவியல் மசோதா வெற்றிகரமாக நிறைவேறி உடனடியாக அமலுக்கு வர வேண்டும் என்பதே சட்டத்தின் வழியில் வாழ்பவர்களின் எதிர்பார்ப்பு.