காஞ்சிபுரம் அருகே சாலவாக்கம் அடுத்த திருவந்தவார் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளியில் ஏறக்குறைய 90 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில், அப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து மிகுந்த துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை தொடர்ந்து குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசியதாக தீயாக தகவல் பரவியது. இந்த தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களிடம், குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை என்றும், அழுகிய முட்டையை காகம் கொண்டு வந்து போட்டதால் தான் துர்நாற்றம் வந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்த நிலையில் அப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்தியுள்ளது. அதற்குப்பதிலாக புதிதாக குடிநீர் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்டுகிறது.
மேலும் மாவட்ட ஆட்சியரின் விளக்கத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்த மழைக்காலத்தில் காகம் வந்து அழுகிய முட்டையை தூக்கிக்கொண்டு வந்து சரியாக அதுவும் குடிநீர் தொட்டியில் உள்ள மூடிகளை காகமே அகற்றி அதன் உள்ளே அழுகிய முட்டையை போட்டு இருக்கிறதா ? அந்த மூடியை அகற்றும் அளவுக்கு காகத்திற்கு பலம் உள்ளதா ? இவ்வாறு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மாவட்ட ஆட்சியரை வறுத்தெடுத்து வருகின்றனர்.