விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை “எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிஹார் மாநிலம் அராரியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இன்று நமது ஜனநாயகத்துக்கு ஒரு மகத்தான நாள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து குறைகூறி வந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் இன்று கடுமையாக அறைந்துள்ளது உச்ச நீதிமன்றம். அவர்கள் எல்லோரும் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். நமது ஜனநாயகம் மற்றம் தேர்தல் முறை குறித்து உலகமே பாராட்டி வரும் வேலையில், அவை குறித்து சொந்த நலனுக்காக எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பி வருகின்றன” என்று தெரிவித்தார்.
மேலும், “காங்கிரஸ் கட்சி பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பறிக்க தீவிரமான சதியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மிகவும் தெளிவாக பாபா சாகேப் அம்பேத்கர் தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியோ மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறது. அது, அக்கட்சி ஆளும் கர்நாடகாவில் உள்ள இடஒதுக்கீடு மாதிரியை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறது.
அங்கு அவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்து, கர்நாடகாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் அவர்களின் பொருளாதார நிலையையும் கணக்கில் கொள்ளாமல் அவர்களை ஒபிசி பட்டியலில் சேர்த்துள்ளன. அவர்களுக்கு இந்திய அரசியல் அமைப்பைப் பற்றி கவலை இல்லை. பல தசாப்தங்களாக அவர்கள் மக்கள் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. மக்களை வாக்களிக்க கூட அவர்கள் விடவில்லை.
தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக ஏழைகள், நேர்மையான வாக்களார்கள் பலம் பெற்றுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற எதிர்க்கட்சிகள் தங்களால் ஆன அனைத்தையும் செய்கிறார்கள்” என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்பில், “பழைய வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் செல்ல முடியாது. தற்போதைய நடைமுறையே சரியாக தான் உள்ளது” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.