பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கேரள மாநிலத்தில் வசித்து வருகிறார். அவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், அந்தப் பெண்ணின் கணவர் ஏதோ வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் அந்தப் பெண்ணும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அந்தப் பெண் நான்கு குழந்தைகளுடன் எர்ணாகுளம் மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற வந்திருந்திருக்கிறார். அப்போது பெண்ணின் உடல்நிலை சற்று ஒத்துழைக்காததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரின் மூன்று குழந்தைகளும், பாராமரிக்க யாருமின்றி வெளியே சுற்றி திரிந்த வண்ணம் இருந்திருக்கின்றனர். பிறந்து நான்கு மாதமே ஆன குழந்தையைகூட பராமரிக்க யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில்தான் 4 குழந்தைகளும், உதவிக்காக கொச்சி நகர மகளிர் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர், அந்த 4 மாதக் குழந்தை அழுதபடி இருந்திருக்கிறது. இதையடுத்து, 4 மாதக் கைக்குழந்தைக்கு சிவில் போலீஸ் அதிகாரியான ஆர்யா தாய்ப்பால் புகட்டினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்னர் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்துக்கு மாற்றப்பட்டனர். பெண் அதிகாரியின் தாய்மை குணம் அனைவராலும் மனதார பாராட்டப்பட்டு வருகிறது. ஆர்யாவும் ஒன்பது மாத குழந்தைக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.