கனிமொழி அவர்கள் சீனா எதிரி நாடு அல்ல அதனால் சீன ராக்கெட்டின் படத்தை போட்டது தவறில்லை என்ற ரீதியில் பேசியிருப்பது நமது தேசத்திற்கு எதிரான கருத்து என்று கனிமொழி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இந்து முன்னணியினர். இதுதொடர்பாக இந்து முன்னணி X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் 2 ஆவது ராக்கெட் ஏவுதளம் திறக்கப்பட்ட நிலையில் இத்திட்டமானது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு என மக்களிடம் மக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை பரப்புவதற்காக திமுக அரசை வாழ்த்தி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு விளம்பரத்தை நாளிதழ்களுக்கு கொடுத்திருந்தார்.
அந்த விளம்பரத்தில் ராக்கெட் ஏவப்பட தயாராக இருப்பது போல் பல ராக்கெட் படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் சிவப்பு நிறத்தில் ஸ்டார் குறியீடுகளுடன் ஒரு ராக்கெட் இடம்பெற்றுள்ளது. இது சீன நாட்டு கொடியை போன்றே இருப்பதால், இந்தியா ராக்கெட் துறையில் அசுர வளர்ச்சி பெற்று வரும் நிலையில் நம் நாட்டு விண்வெளி வீரர்களை அவமதிப்பது போல் சீன நாட்டின் ராக்கெட் போட்டிருப்பது பிரதமர் மோடி அவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இது விமர்சிக்கப்பட்ட நிலையில், கனிமொழி அவர்கள் சீனா எதிரி நாடு அல்ல அதனால் சீன ராக்கெட்டின் படத்தை போட்டது தவறில்லை என்ற ரீதியில் பேசியிருப்பது நமது தேசத்திற்கு எதிரான கருத்தாகும். இந்தக் கருத்தில் வியக்க ஒன்றுமில்லை, நமது நாட்டுக்கு எதிராக செயல்படும் சீனாவிற்கும் பாகிஸ்தானிற்கும் சிவப்பு கம்பளம் விரிப்பதே இவர்களது மரபு. இந்த தேசத்திலேயே இருந்து கொண்டு அந்நிய நாடுகளுக்கு வால் பிடிக்கும் இவர்கள் திருந்த வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது.