திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் மதத்துக்கு மாறிய நிலையில், தனது பெயரையும் உமர் என மாற்றிக் கொண்டார்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்த இவர், கீழ்க்கட்டளை பகுதியில் பிரியாணிக்கடை ஒன்றில் மாஸ்டராக பணி புரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் திருமணம் ஆகாத உமர் அயனாவரம் வசந்த கார்டன் பகுதியை சேர்ந்த சையது அலி பாத்திமா என்ற பெண்ணை அவரது குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்த பின் உமரும் அவரது மனைவி சையது அலி பாத்திமாவும் கீழக்கட்டளை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் உமர் வேலையில் இருந்து நின்று, கடந்த 10 நாட்களுக்கு முன்பு கீழ்கட்டளை பகுதியில் வசித்து வந்த வீட்டை காலி செய்துவிட்டு தனது மனைவியோடு அயனாவரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் தங்கி வந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 9 ஆம் தேதி சையது அலி பாத்திமாவும், உமரும் அயனாவரம் வசந்த கார்டன் பிரதான சாலையில் புதிதாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடி பெயர்ந்துள்ளனர். இதையடுத்து அன்று மாலை, சையது அலி பாத்திமா புதிய வீட்டிற்கு பால் காய்ச்சி அருகில் உள்ளவர்களுக்கு பர்தா அணியாமல் பால் கொடுக்கச் சென்றுள்ளார். இஸ்லாம் மார்க்கத்தை தீவிரமாக பின்பற்றி வரும் உமர், பர்தா அணியாமல் வெளியே செல்லக் கூடாது எனக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த உமர், பிரியாணி கரண்டியால் பாத்திமாவின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சையது அலி பாத்திமா கீழே விழுந்துள்ளார். பினனர் பாத்திமாவின் தம்பிக்கு போன் செய்து கோபத்தில் உனது அக்காவை அடித்துவிட்டேன். அவர் வீட்டில் மயங்கி கிடக்கிறாள் உடனடியாக செல்லுங்கள் என கூறியுள்ளார்.
இதையடுத்து உடனடியாக, அவரது வீட்டிற்குச் சென்ற குடும்பத்தினர், சையது அலி பாத்திமாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அனுமதித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் செல்போன் சிக்னலை வைத்து அயனாவரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த உமரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சையது அலி பாத்திமா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து உமரை சிறையில் அடைத்துள்ள நிலையில், தற்போது கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி அயனாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.