கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்ற ஒரு பேசுபொருளாகவும் அதிகமான கருத்து முரண்பாடுகளை இன நல்லுறவுகளைச் சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளையும் தூண்டக்கூடியதாக இஸ்லாமிய போதகர் ஹமீத் மெளலவி என்பவர் பேசிய காணொளி சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
தமிழ் தாவா மீடியா என்பது இலங்கையை தளமாகக் கொண்ட தமிழ் இஸ்லாமிய சமூக ஊடக சேனலாகும். கடந்த நவம்பர் 14 ஆம் தேதி இலங்கையில் உள்ள இஸ்லாமிய பள்ளி ஒன்றில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அந்த பரதநாட்டிய நிகழ்ச்சியை விமர்சித்து மௌலவி அப்துல் ஹமீத் ஷரீ என்ற வஹாபி போதகர் பேசும் வீடியோவை தமிழ் தாவா மீடியா சேனல் சமீபத்தில் வெளியிட்டது. அந்த காணொளியில், “மாணவர்கள் முன் பெண்களைப் போல் ஆண்கள் பரதநாட்டியம் ஆடுவது வெட்கக்கேடானது. பரதநாட்டியம் என்பது பரத்தைகள் உடைய நடனம். பரத்தி என்றால் விபச்சாரிகள் என்று பொருள். அக்காலத்தில் மன்னர்மாருக்கு முன்பாக அழகிய பெண்கள் ஆடி குஷிபடுத்தவும் அவர்களுக்கு பாலுணர்வை தூண்டுவதற்குமாக பரதநாட்டியம் நடத்தப்பட்டது. இவ்வாறு மிக கொச்சையாக அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார்.
இந்த காணொளியானது இலங்கை இந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு வெடித்தது. மௌலவி அப்துல் ஹமீத் ஷரீயின் பரதநாட்டியம் குறித்து அவதூறான கருத்து வெளியிடப்பட்டதை கண்டித்து சுவாமி விபுலானந்தா நிறுவக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மௌலவியின் கேவலமான கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பதாகைகளை மாணவர்கள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையின் மனித உரிமைப் பாதுகாவலரும் சிவில் சமூக ஆர்வலருமான தாமோதரம் பிரதீவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்தக் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தும், மௌலவி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்து கலாசாரத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்ட மௌலவி மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தாமோதரம் பிரதீவன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை இந்துக்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கோபங்களை வெளிப்படுத்தும் பதிவுகளைப் பகிர்ந்துள்ளனர்.
மௌலவியின் கருத்துக்கு முஸ்லிம்கள் கூட கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையானது மௌலவியைக் கண்டித்து ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்தது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், “இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ள மௌலவியின் கருத்துக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். மற்ற மதங்களின் கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கு எதிராக பேசுவது இஸ்லாத்திற்கு எதிரானது. இந்த அறிக்கையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று கூறினார்.
சமூகவலைத்தளங்களில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, மௌலவி அப்துல் ஹமீத் ஷரீ தமிழ் தாவா மீடியா சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார், பரதநாட்டியம் பற்றி இந்து அறிஞர்கள் கூறியதை மட்டுமே மேற்கோள் காட்டுவதாகவும், இந்துக்களை அவமதிப்பது என்னுடைய நோக்கம் அல்ல என்றும் கூறினார். மேலும் இந்த கருத்து இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் கூறினார்.
பரதக்கலை என்பது 64 கலைகளிலும் சிறந்த ஒரு கலையாக காணப்படுகிறது என்பதையும் அதனால்தான் அந்தக் கலையினுடைய நாயகனாக சைவத்த தமிழர்களுடைய முழுமுதற் கடவுளான சிவபெருமான் காணாப்படுகிறார் என்பதோடு நடராஜர் உருவத்திலே அவர் இந்த கலையினை வெளிப்படுத்துகிறார் என்பதையும் அவ்வாறான எம் புனிதக் கலையினையும் இந்தக் கலையினுடைய அடையாளமான நடராஜர் பெருமானை வழிபடுகின்ற சைவத் தமிழர்களுடைய மரபையும் கலை கலாச்சாரத்தையும் நம்பிக்கையினையும் நித்திக்கும் விதமாக இந்த மெளலவி வெளியிட்டிருக்கிற இந்த கருத்து மிகவும் வேதனைக்குரியது கண்டனத்துக்குரியது. இவ்வாறு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.