பாரத தேசத்தை தட்டியெழுப்பிய வீரம் செறிந்த மருது சகோதரர்களின் “ஜம்புத்தீவு பிரகடனம்” !

பாரத தேசத்தை தட்டியெழுப்பிய வீரம் செறிந்த மருது சகோதரர்களின் “ஜம்புத்தீவு பிரகடனம்” !

Share it if you like it

ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்த பாரத தேசத்தை தட்டியெழுப்ப சிங்கநாதமாக முழங்கப்பட்டதுதான் வீரம் செறிந்த மருது சகோதரர்களின் “ஜம்புத்தீவு பிரகடனம்” ஆகும். ஆங்கிலேய படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து மருதிருவரால் 1801-ம் ஆண்டு ஜுன் மாதம் 16 ம் நாள் திருச்சி கோட்டைச் சுவற்றிலும், ஸ்ரீரங்கம் கோவில் சுவற்றிலும் சுவரொட்டியாக ஒட்டப்பட்ட பிரகடனம் அது.
சுதந்திரப் போராட்டத்தில் வடக்கே நிகழ்ந்த போர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றன இந்திய வரலாற்றுக் குழுவால். (Indian Council Historical Research) தென்னிந்தியாவின் புரட்சிகள் தேய்பிறை நிலவாக ஒதுக்கித்தள்ளபடுகின்றன. இந்த பாரபட்ச போக்கு மாறி உண்மையான சுதந்திரப் போராட்டம் இந்தியாவின் எந்த மூலையில் நிகழ்ந்திருந்தாலும் அது மக்களுக்கு உள்ளது உள்ளபடி தெரியப்படுத்தப்பட வேண்டும்.

#ஜம்புத்தீவுபிரகடனம்

ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், மறையர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் , சூத்திரர்கள், சாம்பவர்கள், முசல்மான்கள் முதலான அனைத்து சாதியர்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால், மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி முட்டாள்தனமாக பிரித்தாளும் தந்திரத்தில் கைதேர்ந்த ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவை போல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ நமது அரசாங்கத்தைப் பறித்துக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும், நட்பும் இல்லாத காரணத்தினால் உங்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் பழிதூற்றிக்கொண்டது மட்டுமன்றி, நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்கள் ஆட்சியில் உள்ள பகுதிகளிளெல்லாம் மக்கள் சோற்றுக்கு பதில் நீராகாரத்தையே உணவாகக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் மனிதன் கடைசியில் இறக்கத்தான் நேரிடும். ஆதலால், பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட்டு இந்த ஈனர்களின் பெயர்கள்கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்ய வேண்டும். மாறாக இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப்போல் சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகளும் ஒழிக்கப்பட வேண்டும். ஆதலால் மீசை வைத்துக்கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும் அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த்தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாய்க்கர்கள், சிப்பாய் மற்றும் போர்க்கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்த வேண்டும்.

ஐரோப்பிய ஈனர்களைக் கண்டால் கண்ட இடத்தில் அழித்துவிட வேண்டும். இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். நம் இரத்தநாளங்களில் ஆங்கிலேய ரத்தங்களால் மாசுபடாதோரையெல்லாம் ஒன்றிணையுங்கள். இந்தச் சுவரொட்டியை படிப்போரும் கேட்போரும் தமது நண்பர்களுக்கும் ஏனையோருக்கும் பரப்புரை செய்யுங்கள். இதேபோன்ற சுவரொட்டிகளைத் தயாரித்துப் பரப்புரை செய்யுங்கள். அவ்வாறு இதில் கண்ட செய்திகளைப் பரப்புரை செய்யாதவன் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகி நரகத்தின் அத்தனை சித்திரைவதைகளுக்கும் ஆட்படுவான். இந்தச் சுவரொட்டியை நீக்க முற்படுபவன் பஞ்சமா பாதகங்களைப் புரிந்த பாவத்திற்கு ஆளாவான். ஒவ்வொருவரும் இதனைப் படித்து நகலெடுத்துக் கொள்ளுங்கள்.

இப்படிக்கு

மருதுபாண்டியன்

பேரரசர்களின் ஊழியன் – ஐரோப்பிய இழிபிறவிகளுக்கு சென்மவிரோதி.

இந்தியச் சுதந்திரத்திற்காக எவ்வளவோ போர்கள் நடந்திருந்தாலும் 1800-ல் நடைபெற்ற சிவகங்கைப் போரே முதல் இரத்தம் தோய்ந்த களமாகப் பார்க்கப்படுகிறது.
இவ்வளவு வீரத்தையும் மக்களுக்கு ஊட்டிய மருதிருவர் ஜம்புத்தீவு பிரகடனம் வெளியிட்ட சில மாதங்களிலேயே உள்நாட்டு துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டனர். ப்ளாக்பர்ன் மற்றும் கர்னல் அக்னியூ ஆகியோரால் 19-10-1801 ல் சோழபுரத்தில் ( கவியோகி சுத்தானந்த பாரதியார் பிறந்த ஊர்) வைத்துப் பிடிக்கப்பட்டனர் மருதிருவர். அக்டோபர் 24 ல் பெயரளவிலான விசாரணைக்குப்பின் திருப்பத்தூர் கோட்டை புளியமரத்தில் தூக்கிலடப்பட்டனர். இவ்விரு தீரர்களுடன் அவர்களுக்குச் சம்பந்தமேயில்லாத 10,12 வயதுடைய பாலகர்களும் தூக்கிலடப்பட்டனர். மருதிருவரின் தலைகளும் துண்டிக்கப்பட்டு காளையார்கோவில் ஆலயம் எதிரேயும், உடல்கள் திருப்பத்தூர் ஸ்வீடிஷ் மருத்துவமனை வளாகத்திலும் புதைக்கப்பட்டன.
சாட்சி விசாரணையேயின்றி மருதிருவருக்கு தண்டனை அளிக்கப்பட்டது. மேலும் கொடுமையாக மருதிருவரை தூக்கிலிட்ட அதே மரத்தில் அவருடைய பேரன்களையும் தூக்கிலிட்டது ஆங்கிலேய ஏகாதிபத்தியம். சிவகங்கைப் பகுதியிலிருந்த புளியமரங்களெல்லாம் பிணங்களைச் சுமந்து நின்றது பெருங்கொடுமை.

மேலும் திண்டுக்கல் பாளையக்காரரான எழுபத்து மூன்று வயது கோபால் நாய்க்கர், பாஞ்சாலங்குறிச்சி செவத்தையா, ஊமை(துரை) குமாரசாமி ஆகியோர்களும் விசாரணைக்கு இடங்கொடாமல் தூக்கிலிட்டது கொடுமையின் உச்சம். தூக்குதண்டனையிலிருந்து தப்பியோடிய எழுபதுக்கும் மேற்பட்ட போராளிகள் கடல்கடந்த வேல்ஸ் தீவு, பினாங்கு பூமிகளுக்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும் மருதுபாண்டியரின் பதின்ம வயது பாலகன் துரைசாமி தூத்துக்குடியிலிருந்து அட்மிரல் நெல்சன் கப்பலில் நாடு கடத்தப்பட்டவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. இத்தனைக் கொலைநிகழ்வுகளுக்கும் காரணமாக இருந்தது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கோபம்தான். அந்தக் கோபத்தின் மூலகாரணம் மருதுபாண்டியர் வெளியிட்ட ஜம்புத்தீவு பிரகடனத்தின் சாரம்சமான விடுதலை வேட்கையைத் தட்டியெழுப்பிய உணர்வே ஆகும்.

— Article by திருமதி.அம்பிகா சாமிநாதன்


Share it if you like it